4 Kaala Poojai: மங்களம் தரும் மகா சிவராத்திரியின் நான்கு கால பூஜை நியமங்களும் பூஜை விதிகளும்…
Lord Shiva Woship On Maha Shivrathri : மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்பானது. இந்த நாளன்று சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதது. ‘சிவ’ என்ற சொல்லே ‘மங்களம்’ என்ற பேறைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தரும் நாள் என்று பொருள். சிவபெருமானுக்கு உரிய நன்னாளான சிவராத்திரி பலவிதமாக அனுசரிக்கப்படுகிறது.
அவற்றில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மஹாசிவராத்திரி என ஐந்து வகை சிவராத்திரிகள் அனுசரிக்கப்பட்டாலும், அனைத்திலும் பெரியது மகா சிவராத்திரி விரதம் ஆகும்.
மஹாசிவராத்திரி நாளன்று சிவனை பூஜிப்பதும், திருவைந்தெழுத்து என போற்றப்படும் நமசிவய மந்திரத்தை உருப்போடுவதும் சிவனின் அருளை பெற்றுக் கொடுக்கும். மகாசிவராத்திரி நாளன்று சிவனை எப்படி பூஜிப்பது? தெரிந்துக் கொண்டு காலத்தை கடந்த காலனை வணங்கி அருள் பெறுவோம்.
மஹாசிவராத்திரி முதல் கால பூஜை
சிவராத்திரி நாளன்று முதல்கால பூஜை, முப்பெரும் தெய்வங்களில் படைக்கும் தொழிலுக்கு உரியவரான “பிரம்மா” சிவபெருமானுக்கு செய்யும் பூஜை ஆகும். சிவராத்திரியின் முதல் கால பூஜையில் “பஞ்ச கவ்வியம்” எனப்படும், பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், சாணம் என பசு மாட்டில் இருந்து கிடைக்கும் பொருட்களை அபிஷேகம் செய்வது சிறப்பு.
பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக வைபப்து சிறப்பு. முதல் கால பூஜை செய்து இறைவனை வணங்குவது பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
மஹாசிவராத்திரி இரண்டாம் கால பூஜை
சிவராத்தியன்று சிவனுக்கு இரண்டாவது காலத்தில் செய்யும் பூஜையை செய்பவர் “விஷ்ணு” என்பது ஐதீகம். சிவபெருமானுக்கு விஷ்ணு செய்யும் இரண்டாம் கால பூஜையில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சந்தன காப்பு சாற்றி சிவனை வழிபட வேண்டும்.
பூஜைக்கு பிறகு, வெண்பட்டாடையை சிவனுக்கு அணிவித்து அலங்காரம் செய்து, பாயசம் நிவேதனமாக படைக்க வேண்டும். இரண்டாவது கால பூஜையில் யஜுர்வேத பாராயணம் செய்யப்படும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானியம் உட்பட சர்வ சம்பத்துகளும் வந்து சேரும்.
மஹாசிவராத்திரி மூன்றாம் கால பூஜை
சக்தியின் வடிவமான அன்னை பார்வதி சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக மூன்றாம் கால பூஜை நடத்தப்படுகிறது. சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜையில் தேன் அபிஷேகம் செய்வது சிறப்பு. அபிஷேகத்தைத் தொடர்ந்து வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து “எள் அன்னம்” நிவேதனமாக படைக்க வேண்டும்.
சாமவேத பாராயணத்துடன் செய்யப்படும் மூன்றாம் கால பூஜை செய்யப்படும், காலம் லிங்கோத்பவ காலம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாம் கால பூஜையை பக்தியுடன் செய்தால், தீய சக்திகள் நமை அண்டாமல் அன்னை சக்தி அருள் புரிவார்.
மகாசிவராத்தியின் நான்காம் கால பூஜை
சிவராத்திரி நாளின் நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிக்கும் காலமாகும். கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்வது விசேஷம். அதர்வண வேதப் பாராயணத்துடன் சாதம் நிவேதனமாகப் படைக்கப்படும். தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படும் காலம் நான்காம் கால பூஜை ஆகும்.