மும்பை இந்தியன்ஸில் அறிமுகமான 4 வீரர்கள் – பீல்டிங், பேட்டிங்கில் சக்கை போடு போட்ட நமன் திர் யார்?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 5ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அறிமுக வீரர்கள்:

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நமன் திர் (ரூ.20 லட்சம்), ஜெரால்டு கோட்ஸி (ரூ.5 கோடி), ஷாம்ஸ் முலானி (ரூ.20 லட்சம் – கடந்த ஆண்டு), லூக் உட் (ரூ.50 லட்சம்) ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். கேப்டன் சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்தார்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜெரால்டு கோட்ஸி 2 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஷாம்ஸ் முலானி 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்தார். லூக் உட் 2 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்தார்.

இவர்கள் தவிர ஒரு நமன் திர் ஒரு பேட்ஸ்மேனாக மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். பீல்டிங்கின் போது ராகுல் திவேதியாவிற்கு கோட்ஸி ஓவரில் டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். மேலும், அனைவரிடமும் பாராட்டுகள் பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர், 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் களமிறங்கினர். இதில் இஷான் கிஷான் 4 பந்துகள் பிடித்த நிலையில், அஸ்மதுல்லா உமர்சாய் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அறிமுக வீரர் நமன் திர் வந்தார். அவர் 10 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 20 ரன்கள் எடுத்து உமர்சாய் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

யார் இந்த நமன் திர்?

பீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் கலக்கிய நமன் திர் யார் என்று பார்க்கலாம் வாங்க…பஞ்சாப்பைச் சேர்ந்தவர் 24 வயதான நமன் திர். கடந்த 2022-23 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி டிராபி கிரிக்கெட் மூலமாக முதல் முறையாக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதே போன்று சையது முஷ்டாக் அலி டிராபி தொடர் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

கடந்த ஆண்டு நடந்த ஷேர்-இ-பஞ்சாப் டி20 டிராபி தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 466 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த 2 ஆவது வீரரானார். இதில் 2 சதங்களும், ஒரு அரைசதமும் அடங்கும். இந்த தொடரில் அவர் 30 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். மேலும், 40 பவுண்டரியும் அடித்திருக்கிறார்.

இது தவிர டிஒய் பாட்டீல் டி20 டிராபி தொடரில் இடம் பெற்று விளையாடிய நமன் திர் 4 இன்னிங்ஸில் 109 ரன்கள் எடுத்துள்ளார். இவரால் பந்து வீசவும் முடியும். ஆனால் டி20 தொடர்களில் இதுவரையில் நமன் திர் பந்து வீசியதில்லை. ஆனால், ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு பஞ்சாப்பைச் சேர்ந்த நேஹல் வதேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். அவர் அந்த தொடரில் 241 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதே போன்று திலக் வர்மாவும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். கடைசியில் இந்திய டி20 அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *