ஒரே ஆர்டரில் 4,000 எலக்ட்ரிக் கார் சேல்ஸ்! சிட்ரான் EV பல்க் பர்சேஸ் பண்ணும் ப்ளூஸ்மார்ட்!
பிரெஞ்சு கார் தயாரிப்பாளரான சிட்ரான் (Citroen) இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் விற்பனையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. மின்சார கார்களை மட்டும் இயக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வாடகை கார் நிறுவனமான ப்ளூஸ்மார்ட் (BluSmart) உடன் இணைந்துள்ளது.
இரு நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தம் மூலம் அடுத்த ஆண்டில் 4,000 சிட்ரான் e-C3 எலக்ட்ரிக் கார்களை ப்ளூஸ்மார்ட் நிறுவனம் வாங்க உள்ளது. முதல் கட்டமாக ப்ளூஸ்மார்ட்டின் EV சார்ஜிங் சூப்பர்ஹப்பில் இருந்து 125 e-C3 கார்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சிட்ரான் e-C3 எலெக்ட்ரிக் கார் அந்நிறுவனத்தின் ICE C3 மாடலை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு முழுமையான எலக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆகும். இது 320 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் என்று கூறுகிறது. வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் முழு சார்ஜ் அடையும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த எலக்ட்ரிக் கார் 57 hp மற்றும் 143 Nm கொண்டதாக இருக்கிறது. 29.2 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. டிரைவர்கள் இரண்டு டிரைவிங் மோடுகளை பயன்படுத்தலாம். தற்போது, இந்த மாடல் ரூ. 12.47 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு உள்ளது. மேலும் 7 ஆண்டுகள்/1.40 லட்சம் கிமீ பேட்டரி உத்தரவாதத்துடன் வருகிறது.
ப்ளூஸ்மார்ட் நிறுவனம் இப்போது சுமார் 7,000 EV கார்களை இயக்கி வருகிறது. 410 மில்லியன் கிமீ தொலைவுக்கு இயக்கி, எலக்ட்ரிக் கார்களை இயக்கியுள்ளது.
இந்தியாவின் மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பதில் ப்ளூஸ்மார்ட் நிறுவனமும் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் 36 சார்ஜிங் சூப்பர்ஹப்களில் 4,400 EV சார்ஜர்கள் உள்ளன. இந்திய முக்கிய நகரங்களில் வளர்ந்து வரும் தேவைக்கு ஈடுகொடுக்க சேவையை விரிவாக்கும் முயற்சியிலும் உள்ளது.