49 Years of Cinema Paithiyam: சினிமாவின் போலித்தனத்தையும், நிஜ வாழ்க்கை எதார்த்தத்தையும் நடிகர்களை வைத்தே சொன்ன படம்

சினிமாவில் நடக்கும் போலித்தனத்தையும், நிஜ வாழ்க்கையின் எதார்த்தையும் சொன்ன தமிழ் படமாக அமைந்து சூப்பர் ஹிட்டும் ஆன படம் தான் சினிமா பைத்தியம்.
இந்தியில் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் கதையின் நாயகியாக நடித்து குடி என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் சினிமா பைத்தியம்.
தமிழில் ஜெயா பச்சன் வேடத்தில் ஜெயசித்ரா பள்ளிக்கு செல்லும் மாணவியாக நடித்திருப்பார். ஜெயசித்ராவை காதலிக்கும் வேடத்தில் கமல்ஹாசன் வருவார். ஜெய்சங்கர் நடிகராகவே நடித்திருப்பார். இவர் மட்டுமல்ல சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நடிகை சகுந்தலா, இயக்குநர்கள் பீம் சிங், பி. மாதவன், சி.வி. ராஜேந்தரன், நடிகர் கே. பாலாஜி, செந்தாமரை உள்ளிட்டோரும் அவர்களவே நடித்திருப்பார்கள்.
சினிமா பார்ப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருக்கும் ஜெயசித்ரா, ஹீரோவாக வரும் ஜெய்சங்கர் மீது தீவிர பற்று உள்ளவராக இருப்பார். அவர் செய்வது அனைத்தும் நிஜம் என நம்புவதோடு, அவரை நிஜ ஹீரோவாகவே பார்த்து வருவார். இந்த சூழ்நிலையில் ஜெயசித்ராவிடம் காதலை வெளிப்படுத்து உறவினரான கமல் காதலுக்கு மறுப்பு தெரிவிப்பதோடு, ஜெய்சங்ரை மணக்க விரும்புவதாக தெரிவிப்பார்.
அப்போதுதான் சினிமா மீதான மோகத்தால் பைத்தியம் போல் மாறியிருக்கும் ஜெய்சித்ராவை மேற்படி இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் உதவியால் சினிமாவில் இருக்கும் போலித்தனத்தையும், நிஜ வாழ்க்கை எதார்த்தத்தையும் வீட்டில் இருப்பவர்கள் புரிய வைப்பார்கள். இறுதியில் தன்னை காதலிக்கும் கமலை கரம் பிடிப்பதோடு படம் நிறைவடையும். படத்தின் கதையானது ஜெய்சங்கரை மையப்படுத்தியே நகரும் விதமாக இருக்கும்.
இந்த படம் வெளியான காலகட்டத்தில் சினிமா என்பது முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி பார்க்கும் விஷயமாக சினிமா அமைந்திருந்தது. இந்த படத்தில் வரும் ஜெயசித்ராவின் கதாபாத்திரத்தை போல் நிஜ வாழ்க்கையிலும் ஏராளமானோர் சினிமாவில் நடப்பது அத்தனையும் நிஜம் என்றே அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தனர்.