’5.5 லட்சம் கோடி’ ஒரே நாளில் இலக்கை எட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு!
சென்னையில் இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல்நாளில் ரூ 5.5லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னணி நிறுவனங்களால் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். இன்று காலை 10 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தாா். இந்த மாநாட்டில் மத்திய ஜவுளி, வா்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வரவேற்புரை ஆற்றிய தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, “நாட்டிலேயே இரண்டாவது பொிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மின்வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல பிாிவுகளில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள உழைக்கும் மகளிாில் 43% தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள். 250 மக்களுக்கு ஒரு மருத்துவா் இருக்கிறாா். அனைவரையும் உள்ளடக்கிய சமூக-பொருளாதார கொள்கையே இதற்கு காரணம் எனக் குறிப்பிட்டாா்.
மாநாட்டின் முதலாம் நாள் முடிவில் டாடா, பெகாட்ரான் போன்ற முதலீட்டாளர்களுடன் 5.5 லட்சம் கோடி ஒப்பதம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன் அசெம்பிளி நடவடிக்கைகளுக்காக 120.8 பில்லியன் ரூபாய் முதலீடு செய்துள்ளது.
ஆப்பிள் ஐ போன் நிறுவனத்தின் தைவான் சப்ளையர் பெகாட்ரான், தனது உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளது.
டாடா பவர் தமிழகத்தில் அடுத்த சில ஆண்டுகளில் 700 பில்லியன் ரூபாய் வரை முதலீடுகளை ஆய்வு செய்து வருவதாக தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான பிரவீர் சின்ஹா நிகழ்வின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உலகளாவிய முதலீட்டாளர்களின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஒப்பந்தங்கள், மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் 61.80 பில்லியன் ரூபாயை உறுதி செய்துள்ளது, அதில் சில மின்சார வாகன (EV) பேட்டரி மற்றும் கார் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வியட்நாமிய மின்சார வாகன தயாரிப்பாளரான VinFast இந்தியாவில் அதன் முதல் உற்பத்தி வசதிகளை அமைக்க தமிழ்நாட்டில் $2 பில்லியன் முதலீடு செய்ய முன் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.