5 நாட்கள்…. ரூ.500 கோடி செலவு… இந்தியாவில் நடந்த பிரமாண்ட திருமணம் எது தெரியுமா?

சுரங்கத் தொழிலதிபர் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணி ரெட்டிக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விக்ரமின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நடந்த திருமணம்தான் இந்தியாவிலேயே அதிக செலவு செய்யப்பட்டு நடந்த திருமணமாக உள்ளது.

நவம்பர் 6, 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த திருமணத்தில் ரூ. 500 கோடி செலவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்தின்போது மணமகள் பிராமணி ரெட்டி அணிந்திருந்த உடை மட்டும் ரூ. 17 கோடி.

தங்க நூல்களால் மிகவும் நுணுக்கமாக காஞ்சீபுரம் புடவையாக மணமகளின் ஆடை வடிவமைக்கப்பட்டு இருந்தது. திருமணத்தின்போது ரூ. 25 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸை மணமகள் அணிந்திருந்தார். அவர் அணிந்த ஒட்டுமொத்த நகைகளின் மதிப்பு ரூ. 90 கோடி.

பெங்களூருவில் நடந்த இந்த திருமணத்தின்போது அங்கிருந்த நட்சத்திர விடுதிகளில் 1500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. விருந்தினர்களை அழைத்து வருவதற்காக 2 ஆயிரம் டாக்ஸிகள், 15 ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மிகப்பெரும் அரச குடும்பங்கள் சாப்பிடும் அளவுக்கு வகை வகையான உயர்தர பதார்த்தங்கள் விருந்தினர்களுக்கு படைக்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு முன்னதாக ஜனார்த்தன ரெட்டி கொடுத்த அழைப்பிதழ்களும் பரபரப்பாக பேசப்பட்டன. ஒவ்வொரு அழைப்பிதழ் உடனும் ஒரு வெள்ளி விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. ஒட்டு மொத்த அழைப்பிதழுக்கு மட்டும் ரூ. 5 கோடி செலவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனார்த்தன ரெட்டி தனது மகள் பிராமணிக்கு ரூ. 500 கோடி செலவில் நடத்திய திருமணம் ஓர் வரலாற்று சாதனையை படைத்தது என்றே சொல்லலாம். இருப்பினும், இந்த அளவு செலவு செய்வற்கு ஜனார்த்தன ரெட்டியிடம் எங்கிருந்து பணம் வந்தது, அவற்றுக்கு வரிகள் சரியாக செலுத்தினாரா என்பது உள்ளிட்ட கேள்விகளை எதிர்க்கட்சியினர் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *