காவிரிக்கரையில் ராமரின் 5 குலதெய்வக் கோயில்கள் – ஒரு ஆச்சர்யப் பகிர்வு!
ஸ்ரீராமர் வணங்கிய ஸ்ரீராமரின் குல தெய்வங்களாகக் கருதப்படும் காவிரிக்கரையோரம் அமைந்த பஞ்சரங்க க்ஷேத்திரங்களும் அயோத்தியைப் போலவே விசேஷமானவை என்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்ஸ்ரீராமபிரானின் அவதாரத்தலமான அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறத் தயார் நிலையில் உள்ளது. இந்த கும்பாபிஷேக விழா உலக அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. இந்நிலையில் ராமாயணத்தில் ராமரின் வாழ்வியலோடு தொடர்புப்படுத்திப் பேசப்பட்ட பல்வேறு இடங்கள் குறித்து அறிந்துகொள்வது அவசியம்.
இந்த வரிசையில் ஸ்ரீராமர் வணங்கிய ஸ்ரீராமரின் குல தெய்வங்களாகக் கருதப்படும் காவிரிக்கரையோரம் அமைந்த பஞ்சரங்க க்ஷேத்திரங்களும் அயோத்தியைப் போலவே விசேஷமானவை என்கிறார்கள்.
பஞ்சம் – என்றால் ‘ஐந்து’ என்றும், ரங்கம் என்றால் ‘ஆறு பிரியும் இடத்தில் ஏற்படும் மேடான பகுதியில் உள்ள மண்டபம்’ என்றும் க்ஷேத்திரம் என்றால் ‘வழிப்பாட்டு தலம்’ என்றும் பொருள்.
அவற்றில் ஆதிரங்கம் மட்டும் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் கரையோரமும், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என மற்ற நான்கும் தமிழ்நாட்டுப் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரமும் அமைந்துள்ளது.
ஆதிரங்கம்:
ஆதிரங்கம் என்னும் க்ஷேத்திரம், தற்பொழுது ஸ்ரீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில் என்று அழைக்கப்பெறுகிறது. 984 -ம் ஆண்டு கங்கர் குல அரசவையின் படைத்தலைவராக இருந்த திருமலைய்யா என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டது. இத்தலம் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தின், காவேரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக ரங்கநாத பெருமாளும், தாயாராக ரங்கநாயகி அம்மாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள்.