குதிகால் வெடிப்பை போக்கும் 5 கிட்சன் குறிப்புகள்.. ஒரே வாரத்தில் மறைய செய்யும் டிப்ஸ்..!
முக அழகை பராமரிக்க நேரம் ஒதுக்கும் பலர் பாதங்களை பராமரிக்க ஏனோ தவற விடுகின்றனர். இது நாள்பட நாள்பட பாராமரிப்பின்மை காரணமாக வெடிப்பு, தோல் உறிதல், கருமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் பொது வெளியில் ஹீல் அணிவதற்கு கூட சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமன்றி எரிச்சலையும் ஏற்படுத்தும்.
வெடிப்பு காரணம் பாராமரிப்பின்மை மட்டுமன்றி உடல் பருமன், கால்களில் பொருந்தக்கூடிய காலணிகளை அணியாமை, நீண்ட நேரம் நின்றுகொண்டே இருத்தல், வறண்ட சருமம், சுகாதாரமின்மை , தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்தல், பக்கவிளைவுகளை உண்டாக்கும் கெமிக்கல் பயன்பாடு போன்ற காரணங்களாலும் குதிகால் வெடிப்பு உண்டாகிறது. சரி இதை சரி செய்ய என்ன செய்யலாம்..?
1) வாழைப்பழம் : வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் ஏ , பி6 மற்றும் சி ஆகியவை சருமத்திற்கு நெகிழ்வுத் தன்மையை அளிக்கிறது. அதோடு சருத்தின் ஈரப்பதத்தைதக்க வைக்கவும் உதவுகிறது. எனவேதான் வாழைப்பழத்தை இயற்கையான மாய்ஸ்சரைசர் என்று அழைக்கின்றனர். குறிப்பாக வறண்ட சருமத்தினருக்கு பலன் தரக்கூடிய பழம்.
தேவையான பொருட்கள்
பழுத்த வாழைப்பழம் – 2
பயன்படுத்தும் முறை :
2 பழுத்த வாழைப்பழங்களை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பழுக்காத வாழைப்பழத்தை பயன்படுத்தக்கூடாது. அது சருமத்தை கடுமையாக பாதிக்கும்.
பின் அந்த பேஸ்டை கால் பாதங்கள் முழுவதும் அப்ளை செய்யவும். நகங்கள், கால் விரல்களுக்கும் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்களுக்கு அப்படியே காய விட்டு பின் தண்ணீரில் கழுவவும்.
இதை 2 வாரங்களுக்கு தூங்குவதற்கு முன் செய்ய நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
2 ) தேன் : தேன் இயற்கையான கிருமி நாசினியாக செயல்படுகிறது. எனவே குதிகால் வெடிப்புக்கு நல்ல பலன் தரும். அதோடு சரும வறட்சியை நீக்கி மாய்ஸ்சரைசராகவும் செயல்படும்.
தேவையான பொருட்கள் :
தேன் – 1 கப்
வெதுவெதுப்பான நீர்
பயன்படுத்தும் முறை :
கால்கள் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதில் 1 கப் தேன் கலந்துகொள்ளுங்கள்.
கால்களை நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள். பின் கால்களை தண்ணீரி ஊற வைத்து 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.
பின் கால்களை கழுவிவிட்டு மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள்.
தினமும் தூங்கும் முன் சில வாரங்களுக்கு செய்து வாருங்கள். பலன் தெரியும்.
3 ) வெஜிடபிள் ஆயில் : சமையல் எண்ணெய் சருமத்தினால் நன்கு உறிஞ்சப்படும் தன்மை கொண்டது. சருமத்திற்கு தேவையான விட்டமின் ஏ, டி, மற்றும் ஈ இருப்பதால் வெடிப்பு காயத்தை ஆற்றி மென்மையான பாதங்களை மீட்டுத் தரும்.
தேவையான பொருட்கள் :
வெஜிடபிள் ஆயில் – 2 tbsp
பயன்படுத்தும் முறை :
முதலில் கால்களை நன்கு சுத்தம் செய்து ஈரப்பதமின்றி துடைத்துக்கொள்ளுங்கள்.
பின் வெஜிடபிள் ஆயிலை கால் பாதங்கள் முழுவதும் தடவுங்கள். விரல்களுக்கும் தடவ வேண்டும்.
பின் சாக்ஸ் அணிந்துகொள்ளுங்கள். இதை இரவு அப்ளை செய்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய பலன் தெரியும்.
4 ) வேஸ்லின் மற்றும் எலுமிச்சை : எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி மற்றும் அசிடிக் அமிலம் பாத வெடிப்புகளுக்கு நல்ல பலன் தரும்.
தேவையான பொருட்கள் :
வேஸ்லின் – 1 tsp
எலுமிச்சை சாறு – 4-5 சொட்டு
வெதுவெதுப்பான நீர்
பயன்படுத்தும் முறை :
வெதுவெதுப்பான நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்களுக்கு மூழ்க வைக்க வேண்டும். பின் ஈரப்பதமின்றி துடைத்துவிடுங்கள்.
வேஸ்லினுடன் எலுமிச்சை சாறு விட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள்.
பின் அதை கால் பாதம், விரல்களில் சீராக அப்ளை செய்து சாக்ஸ் அணிந்துகொள்ளுங்கள்.
இரவு முழுவதும் அப்படியே தூங்குங்கள். மறுநாள் காலை கழுவுங்கள்.
இதை தினமும் செய்ய வெடிப்புகள் குறையும்.
5 ) அரிசி மாவு, தேன் மற்றும் வினிகர் : இயற்கையான முறையில் இறந்த செல்களை நீக்குவதற்கு அரிசி மாவு சிறந்தது. அதோடு தேன் கிருமி நாசினியாகவும், வினிகர் மாய்ஸ்சரைசராகவும் செயல்படுவதால் குதிகால் வெடிப்புக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – 2 tbsp
தேன் – 1 tsp
வினிகர் – 5-6 சொட்டு
பயன்படுத்தும் முறை :
முதலில் கொடுக்கப்பட்டவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலந்துகொள்ளுங்கள்.
பின் உங்கள் பாதங்களை 10 நிமிடங்களுக்கு வெதுவெதுப்பான நீரில் மூழ்க வைத்து பின் ஈரப்பதமின்றி துடைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கலந்து வைத்துள்ள பேஸ்டை கால்களில் தடவி மசாஜ் செய்யுங்கள்.
இப்படி வாரம் 2-3 முறை செய்யுங்கள்.