கடைசி 2 பந்தில் 5 ரன் எடுத்தால்.. வெற்றிக்கு அருகே வந்த சன்ரைசர்ஸ்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. 209 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த அணியின் அதிரடி வீரர் கிளாசன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதை அடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்த லீக் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் பில் சால்ட் அபாரமாக ஆடி 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ஆனால், மறுபுறம் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தது.

சுனில் நரைன் 2, வெங்கடேஷ் ஐயர் 7, ஸ்ரேயாஸ் ஐயர் 0, நிதிஷ் ராணா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஏழாம் வரிசையில் இறங்கிய ரிங்கு சிங் விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தினார். அவர் அதிரடி ஆட்டம் ஆடப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில் எட்டாம் வரிசையில் இறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் சிக்ஸ் மழை பொழிந்து போட்டியை மாற்றினார்.

கடைசி 5 ஓவர்களில் மட்டும் கொல்கத்தா அணி 85 ரன்கள் சேர்த்தது. 7 சிக்ஸர்கள் விளாசிய ரஸ்ஸல் 20 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 25 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிங்கு சிங் 15 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 13.5 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்களை இழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த இடத்தில் இருந்து 208 ரன்களுக்கு அந்த அணியை அழைத்துச் சென்றார் ரஸ்ஸல்.

அடுத்து பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு துவக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 32 ரன்களும், அபிஷேக் சர்மா 32 ரன்களும் சேர்த்து சிறந்த துவக்கம் அளித்தனர். ஆனால், அவர்கள் விக்கெட்டை இழந்த உடன் அந்த அணியின் ரன் ரேட் குறைந்தது. பின்னர் ஹென்ரிச் கிளாசன் வெறும் சிக்ஸ் மட்டுமே அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 8 சிக்ஸ் அடித்தார்.

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் முத்தக் பந்தில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் ஷாபாஸ் அஹமது அவுட் ஆனார். நான்காவது பந்தில் புதிய பேட்ஸ்மேன் ஜான்சன் 1 ரன் எடுத்தார். கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கிளாசன் களத்தில் இருந்தார். அவர் ஒரு சிக்ஸ் அடித்தால் ஹைதராபாத் வென்று விடும் என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் அவர் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *