கமல் பெயரை காப்பாத்த 5 குறும்படம்; அர்ச்சனாவுக்கு ஒண்ணு கூட இல்லையா? சனம் ஷெட்டி விமர்சனம்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டி வரும் நிலையில், நேற்று நடந்த எபிசோடில் அர்ச்சனாவிடம் கமல்ஹாசன் நடந்து கொண்ட விதம் சரி இல்லை என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான சனம் ஷெட்டி விமர்சித்து உள்ளார்.
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. எல்லா சீசன்களைப் போல் இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது. அதேநேரம் போட்டியாளர்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருவார்கள். ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசனையும் ரசிகர்களும் விமர்சகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த பிக் பாஸ் சீசனில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு அடிக்கடி டபுள் எலிமினேசன்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த வாரமும் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வினுஷா விவகாரத்திலேயே நிக்சன் வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும், ஆனால் அதன் பின்னர் ஐசுவை வெளியேற்றி விட்டு மிக்ஜாம் புயலை காரணமாக வைத்து நிக்சனை மீண்டும் பிக் பாஸ் காப்பாற்றிய நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். விசித்ரா அல்லது மாயா இருவரில் ஒருவர் தான் இந்த சீசன் டைட்டிலை வெல்லப் போகிறவர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து ஸ்கோர் செய்த அர்ச்சனாவை தற்போது ஆஃப் செய்ய கமல்ஹாசனே களமிறங்கி விட்டாரா என்கிற கேள்விகளை சனம் ஷெட்டி எழுப்பியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் போடும் குறும்படங்கள் தான் ஹைலைட்டாக இருந்து வந்த நிலையில், இந்த சீசனில் கமல் தனது பெயரை காப்பாற்றிக் கொள்ள பிரதீப் ஆண்டனி விஷயத்தில் 5 குறும்படங்கள் போட்டார். விசித்ரா மற்றும் அர்ச்சனா இடையேயான பஞ்சாயத்தில் ஒரு குறும்படம் கூட போடாமல் புரிஞ்சிடுச்சா என்று கடந்து போகிறார் என சனம் ஷெட்டி விமர்சித்து உள்ளார்.
இதுதொடர்பாக சனம் ஷெட்டி தனது எக்ஸ் பக்கத்தில், சந்தேகம் கிளியர் ஆச்சா அர்ச்சனானு திரும்ப திரும்ப கேட்பாங்க, ஆனா அந்த சந்தேகம் கிளியர் பண்ண ஒரு குறும்படம் போட மாட்டாங்க! பெயரை கிளியர் பண்ண மட்டும் 5 குறும்படம் போடுவாங்க! எனப் பதிவிட்டுள்ளார்.