50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்! உயர்த்தப்பட்ட நிதி! இந்த முறையாவது தென் மாநிலங்களுக்கு கிடைக்குமா?
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
இதில், மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் குறித்து கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.15,000 கோடி கடன் வழங்கப்பட்டிருந்தது.
அந்த நிதியைப் பயன்படுத்தி நீண்ட காலத்துக்கான கட்டமைப்புத் திட்டங்களில் மாநிலங்கள் முதலீடு செய்ய முடியும். அதேபோல கடந்த 2023-2024ம் ஆண்டு ரூ.1,00,000 கோடி கடன் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சசர் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அந்தக் கடனை 50 ஆண்டுகளில் மாநிலங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அத்தொகைக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொகை ரூ.1.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தொகையில் மொத்தமும் விடுவிக்கப்படாது. பெரும்பாலான தொகை விடுவிக்கப்பட்டாலும், மீதமுள்ள தொகையை மாநில அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் விடுவிக்கப்படும்.
பழைய அரசு வாகனங்களை ஒழித்துக்கட்டுவது, நகர்ப்புற திட்டமிட்டல், சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிதி சீர்திருத்தங்களை உருவாக்குதல் போன்றவை மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டால் மீதமுள்ள நிதியும் விடுவிக்கப்படும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தொகையில், சுமார் 75 சதவிகிதம் வரை (ரூ.81,195.35 கோடி) 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை விடுவிக்கப்பட்டிருக்கிறது.