5000+ படங்கள்.. 10 வருஷம் இப்படி தான் குடும்பம் நடத்துனோம்.. நடிகர் ஆர். சுந்தரராஜன் மனைவி ஓபன் டாக்..
இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் ஆர். சுந்தரராஜன். பயணங்கள் முடிவதில்லை, ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள், திருமதி பழனிசாமி உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கியவர். 25 படங்களை இயக்கிய அவர் ஒரு குணச்சித்திர நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனின் தந்தையாக நடித்து வருகிறார் ஆர். சுந்தரராஜன. இந்த நிலையில் ஆர். சுந்தரராஜனின் மனைவி துர்கா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் தனது ஆரம்பகால குடும்ப வாழ்க்கை குறித்தும், தனது கணவரின் சினிமா வாழ்க்கை குறித்து அவர் பல கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக பணியாற்றிய துர்கா தனது அனுபவம் குறித்தும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்“ நான் 5000 படங்களுக்கு மேல் டப்பிங் பேசி இருக்கிறேன். அந்த டயலாக் எல்லாமே எனக்கு இப்போது கூட நினைவில் இருக்கிறது. எங்களுடைய காலத்தில் சின்ன பிள்ளைகளுக்கு கூட பெரியவர்கள் தான் டப்பிங் கொடுப்போம். ஆனால் இப்போது அப்படி இல்லை. குழந்தை நட்சிரத்திரங்களுக்கு அவர்களே டப்பிங் கொடுத்துவிடுகின்றனர்.
பூவே பூச்சூடவா படத்தில் நான் தான் நதியாவுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தேன் என்று கூறிய அவர் அப்படியே அந்த வீடியோவில் டப்பிங் பேசியும் அசத்தி உள்ளார்.
தொடர்ந்து தனது டப்பிங் கலைஞர் வாழ்க்கை எப்படி தொடங்கியது என்று பேசிய துர்கா சுந்த்ரராஜன் “ என் அக்காவும் தெலுங்கு படங்களில் டப்பிங் கலைஞர் என்பதால் எனக்கு சிறு வயதில் இருந்தே டப்பிங் பேச வேண்டும் என்று ஆசை இருந்தது. என் அம்மாவிடம் இதுபற்றி சொன்ன போது அவர் முதலில் அனுமதிக்கவில்லை. பின்னர் என் அம்மாவுடன் ஷூட்டிங் செல்லும் போது, அங்கிருந்த இயக்குனர்கள் ஒரு முறை பேசி பார்க்கட்டுமே என்று சொல்ல அப்படி தான் நான் டப்பிங் பேச தொடங்கினேன். பின்னர் அதுவே என் வேலையாக மாறிவிட்டது.
ஆனால் அதன்பிறகு எனது அம்மாவோ அல்லது என் கணவரோ எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. எனக்கு குழந்தைகளை அம்மாதான் பார்த்துக்கொண்டார். என் கணவரும் அப்போது பயங்கர பிசியாக இருந்தார். ஒரு நாள் பொள்ளாச்சியில் இருப்பார். அடுத்த நாள் பெங்களூருவில் இருப்பார். நானும் டப்பிங்கில் பிசியாக இருப்பேன். ஆரம்பத்தில் நாங்கள் அதிகமாக சந்தித்துக்கொண்டதே இல்லை.
அவர் ஊருக்கு வரும் போது குழந்தைகளை பார்த்துவிட்டு, என்னை சந்திக்க டப்பிங் ஸ்டூடியோவிற்கு வருவார். வெளியே ஒரு காரில் காத்திருப்பார். அந்த 10 – 15 நாட்கள் என்னவெல்லாம் நடந்தது என்று அப்போது நாங்கள் பேசுவோம். குழந்தைகள் உடல்நிலை, யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என குடும்ப வரவு செலவு உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் காரில் தான் பேசுவோம். இப்படியே 10 ஆண்டுகள் எங்கள் வாழ்க்கை இருந்தது. எனது கணவர் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் ஊருக்கு வருவார். அப்போது நாங்கள் காரில் தான் சந்தித்துக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
பாக்கியராஜ் இயக்கி நடித்திருந்த தூறல் நின்னு போச்சு படத்தில் கதாநாயகியாக நடித்த சுலக்ஷனாவுக்கு துர்கா தான் டப்பிங் பேசி இருப்பார். இதே போல் பூவே பூச்சூடவா படத்தில் நதியாவுக்கும் இவரே டப்பிங் கொடுத்திருப்பார். 80-களில் வெளியான பல படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசி உள்ளார். மேலும் அம்மன் படத்தில் வரும் , ரம்யா கிருஷ்ணனுக்கும், அதே படத்தில் அம்மனாக நடித்திருக்கும் குட்டி பொண்ணுக்கும், முதல்வன் படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கும் துர்கா சுந்த்ரராஜன் டப்பிங் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது