|

51 இன்ச் உயரம்.. 1.5 டன் எடை.. அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்படும் ராமர் சிலையின் சிறப்பு என்னென்ன?

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் 5 வயது கொண்ட குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்நிலையில் தான் அந்த சிலையின் உயரம், எடை உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக பல ஆண்டுகளாக சட்டபோராட்டம் நடந்தது. 2019ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நாகரா கட்டடக்கலை: இதையடுத்து பணிகள் விரைவாக தொடங்கின. மொத்தம் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. 3 அடுக்குகளாக நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. . மொத்தம் 161 அடி உயரத்தில் கோவில் பிரமாண்டமாக கோவில் அமைய உள்ளது.

கும்பாபிஷேகம்: இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி கொண்டு வரப்பட்ட கற்கள் உதவியுடன் கோவில் கட்டப்பட்டு வருகிற. பழமை மாறாமல் பக்தர்களை கவரும் வகையில் சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரமாண்டமான தூண்களுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

5 வயது ராமர் சிலை: இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர். இத்தகைய சூழலில் தான் கோவில் கருவறையில் நிறுவப்பட உள்ள ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 5 வயது குழந்தை வடிவ ராமர் சிலை கோவில் கருவறையில் நிறுவப்பட உள்ளது.

சிலையின் சிறப்பு: இந்நிலையில் தான் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் குழந்தை வடிவ ராமர் சிலையின் உயரம், எடை குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதுபற்றி ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது: ராமர் கோவில் கருவறையில் சாந்த முகம் கொண்ட 5 வயது பருவ ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலைக்கான தேர்வு பணிகள் கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த சிலை என்பது பக்தியுடன் ராமரின் சாந்தமான சிரிப்புடன் கூடிய ராமரை பக்தர்களுக்கு காட்டும் வகையில் செதுக்கப்பட்ள்ளது.

51 இன்ச் உயரம் 1.5 டன் எடை: இந்த சிலை என்பது 51 இன்ச் உயரம் கொண்டது. இதன் எடை என்பது 1.5 டன் ஆகும். ராமரின் தலையில் கிரீடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வரும் 16ம் தேதி முதல் பூஜை செய்யப்பட்டு வரும் 18ம் தேதி கோவில் கருவறையில் நிறுவப்பட உள்ளது. இந்த சிலைக்கு தண்ணீர், பால் அபிேஷகம் செய்தாலும் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

சூரியஒளி விழும்: மேலும் இந்த சிலையின் மீது ஒவ்வொரு ஆண்டின் ராமநவமி தினத்தில் சூரியஒளி விழுவது போன்று வடிமைக்கப்பட்டுள்ளது. ராமநவமி தினத்தில் மதியம் 12 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக ராமரின் நெற்றியின் விழும்படி கோவில் கருவறை வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஜடாயு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வளாகத்திலேயே மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர், மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷபரி மற்றும் தேவி அஹில்யா ஆகியோரின் கோவில்களும் கட்டப்பட உள்ளது.

தரிசனம் எப்போது: கடந்த 300 ஆண்டுகளில் வட இந்தியாவில் இதுபோன்ற கோயில் கட்டப்படவில்லை என கட்டுமான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 22ம் தேதி கும்பாபிேஷகம் நடத்தப்பட உள்ளது. இது மிகவும் முக்கிய நாள். அன்றைய தினம் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில் குறைந்தது 5 விளக்குகள் ஏற்ற வேண்டும். ஜனவரி 26ம் தேதிக்கு பிறகு மக்கள் கோவிலுக்கு வர வேண்டும். அதன்பிறகு இரவு 12 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் திறந்து இருக்கும்” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *