இந்திய பாஸ்போர்ட்-ஐ தூக்கி எறிந்த 59100 இந்தியர்கள்.. அமெரிக்க அரசு முக்கிய அறிவிப்பு..!!
மேற்படிப்பு, வேலை, ஆராய்ச்சி போன்றவற்றுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு செல்லவே பெரும்பாலான இந்தியர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 59000 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
இந்தியா மட்டுமன்றி பெரும்பாலான நாடுகளை சேர்ந்தவர்கள் விரும்பி சென்று கல்வி பயில்வது மற்றும் பணிபுரியும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஆன் சைட் பணிக்காக தங்களின் ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கேயே குடியுரிமை பெற்று குடும்பத்துடன் செட்டிலாகிவிடுகின்றனர். எதிர்காலம், பிள்ளைகளின் வாழ்க்கை முறை, கல்வி, உயர்தர வாழ்க்கை முறை, சிறப்பான மருத்துவ வசதிகள் என பல காரணத்திற்காக அமெரிக்காவில் செட்டிலாகி வருவது அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையின் படி கடந்த ஆண்டில் மட்டும் 59,100 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் 6.7 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர்.
முதல் இடத்தில் மெக்சிகோ: அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது. கிட்டதட்ட 1.1 லட்சம் மெக்சிகோ மக்கள் கடந்த ஆண்டில் அமெரிக்க குடிமகன்களாகியுள்ளனர்.
அதாவது புதிதாக குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் மெக்சிகோவை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 12.7% ஆகும். அதே போல பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்கள் 44 ஆயிரத்து 800 பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு மொத்தம் 9.63 லட்சம் பேர் புதிதாக அமெரிக்க குடியுரிமை பெற்றனர். ஆனால் அதுவே 2023ஆம் ஆண்டு 8.7 லட்சம் என குறைந்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை பெற நிபந்தனைகள்: அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. குறிப்பாக, குடியுரிமை கோரும் நபர் 5 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும்.
அமெரிக்க குடிமகனை திருமணம் செய்தவர்கள் 3 ஆண்டுகள் அங்கேயே தங்கி இருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்யலாம், இது தவிர அமெரிக்க ராணுவத்தில் இணைந்து சேவையாற்றுபவர்களுக்கும் விரைவாக குடியுரிமை வழங்கப்படுகிறது.
முறைகேடாக குடியேற முயற்சி: அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற நோக்கில் முறைகேடாக பலர் அமெரிக்காவினுள் நுழைகின்றனர் . இதில் ஏராளமான இந்தியர்களும் உள்ளனர் என சமீபத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை இந்தியாவை சேர்ந்த 42,000 முறைகேடாக அமெரிக்காவினுள் நுழைந்துள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் மெக்சிகோ எல்லை வழியே அமெரிக்காவினுள் சென்றுள்ளனர்.
சுமார் 96,000 இந்தியர்களை பிடித்து மீண்டும் தாயகத்துக்கே அனுப்பியதாக அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.