இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் 5ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை..!
பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின.
தொழிலாளார் முன்னேற்ற சங்க பேரவை(தொமுச) தவிர மற்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸை வழங்கினர். இதனையடுத்து, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக்கழக நிர்வாகங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த டிச.27, ஜன.3, ஜன.8 ஆகிய தினங்களில் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமூக உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் 9, 10 ஆகிய நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் பொது மக்கள் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவித்து பணிக்கு திரும்பினர். இதையடுத்து கடந்த ஜன.19ம் தேதி 4ம் கட்டபேச்சுவார்த்தை, அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு வேலையில்லை சம்பளம் இல்லை, பழிவாங்குதல் நடவடிக்கை எதுவும் இருக்காது, வரவு செலவு வித்தியாசத்தொகைக்கு அரசு நிதி ஒதுக்குவது பற்றி அரசுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும், காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாரிசு பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பிப்.7ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 5ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை 3 மணியளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ள தொழிலாளர் நல இணை ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.