கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: மனைவி குழந்தைகளை விட்டு விட்டு வந்த நபரின் பின்னணி
கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த அமரகூன்முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(40) கனடாவுக்கு புதிதாக வந்தவர் என்று தெரியவந்துள்ளது.
கனடாவை உலுக்கிய சம்பவம்
கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் புதன்கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில் தர்ஷனி டிலந்திகா ஏகநாயக(Darshani Ekanyake) (35) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களுடன் தங்கியிருந்த மற்றொரு இலங்கையர் அமரகூன் முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) என்பவரும் கொல்லப்பட்டார்.
ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க(Dhanushka Wickramasinghe) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைக்கு பிறகு சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர் இலங்கையை சேர்ந்த 19 வயதான ஃபெப்ரியோ டி ஸோய்சா என்பவர் ஆவார். அவர் மீது தற்போது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவுக்கு புதிதாக வந்தவர்
இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் பரிதாபமாக உயிரிழந்த அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(Gamini Amarakoon Amarakoon Mudiyanselage, 40) கனடாவுக்கு வந்து 2 மாதங்கள் மட்டுமே ஆகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை இலங்கையில் விட்டுவிட்டு கனடாவிற்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஒட்டாவாவில் உள்ள ஹில்டா ஜெயவர்தனாராமய பௌத்த மடாலயத்தின் ஆலய பணிப்பாளர் நாரத கொடிதுவாக்கு(Naradha Kodituwakku), உயிரிழந்த தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பம் கோவில் உறுப்பினர்கள் ஆவார்கள், ஆனால் காமினி அமரகோன் சமீபத்தில் தான் கனடாவுக்கு வந்தார், அவர் கோவில் உறுப்பினர் இல்லை என தெரிவித்துள்ளார்.
நட்பின் அடிப்படையில் Mudiyanselage-க்கு உதவ தனுஷ்க விக்கிரமசிங்க முன்வந்ததாகவும் நாரத கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக கனடாவில் தன்னை ஒரு தொழில்முனைவோராக நிலைநிறுத்திக் கொள்ள Mudiyanselage முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது.
Mudiyanselage தன்னை சமூக ஊடகங்களில் விற்பனை மற்றும் டிஜிட்டல் மார்க்கெட் ஆலோசகராக வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் VIP air tour என்ற சுற்றுலா நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த சுற்றுலா நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் பணியை முதன்மையாக நடத்தி வருகிறார்.