ரூ.6000 நிவாரணம்.. சென்னையில் விடுபட்டவர்களுக்கு எப்போது கிடைக்கும்? மேயர் பிரியா கொடுத்த அப்டேட்
சென்னை: சென்னை முகவரியில் ரேஷன் அட்டை இல்லாமல் வசித்த வெளி மாவட்ட மக்கள் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அப்டேட்டை சென்னை மேயர் பிரியா கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் என்பது சென்னைக்கு மிகுந்த சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பாக பருவமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளை சென்னை கடந்த 2015ம் ஆண்டிலிருந்து எதிர்கொண்டு வருகிறது. இப்படியாக கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதமும் சென்னையை புயல் தாக்கியது. வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வடதமிழகத்தை ஒட்டிய தெற்கு ஆந்திராவில் கரையை கடந்தது. இதனால் சென்னையில் பெரும் மழை பெய்தது.
வழக்கத்திற்கு மாறான மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பேருந்து,ரயில் மற்றும் விமான சேவைகள் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தன. சென்னையின் நகர்ப்புற பகுதிகளான அயனாவரம், பட்டாளம், திருவொற்றியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிய மூன்று நாட்களுக்கும் மேல் ஆனது. புறநகர் பகுதிகளில் ஒருவாரம் வரை வெள்ளம் வடியாமல் இருந்ததால், மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டனர்.
சென்னை தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளும் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டன. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், மற்ற மூன்று மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால், சென்னையில் தங்கியுள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டார்கள். எனவே, இவர்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டன. அதில், ஊர், ரேஷன் அட்டை எண், மொபைல் எண், முகவரி, சென்னையில் தங்கியிருப்பதற்கான ஆதாரம் உள்ளிட்டவை இணைக்கப்பட கேட்டுக்கொள்ளப்பட்டது. 5.5 லட்சம் பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.