66 ஏக்கர்.. கோயம்பேடு பேருந்து நிலைய நிலத்தை தனியாருக்கு கொடுப்பதா? அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் விரைவாக பயணிக்கவும் வசதியாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் உருவாக்கப்பட்டது. பொங்கல் முதல் இந்த பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்கான பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
சென்னை மாநகரின் முதன்மை அடையாளமாக திகழ்ந்து வரும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சென்னை மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகிவிட்டது. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை அவசரம், அவசரமாக கிளாம்பாக்கத்திற்கு மாற்றிய தமிழக அரசு, இன்னொரு பகுதியை இந்த ஆண்டு இறுதிக்குள் கூத்தம்பாக்கத்திற்கு மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்குக் காரணம் ஆட்சி முடிவதற்கு முன்பாகவே கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தை அபுதாபியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவசரம் தான் என்று கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை திருமழிசைக்கு மாற்றி விட்டு, அந்த இடத்தில் தனியார் வணிக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதைக் கண்டித்து, கடந்த ஆகஸ்ட் 17ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அப்போது அதை தமிழக அரசு மறுத்தது. ஆனால், இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் முழுமையாக இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, அந்த இடத்தில் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்.