முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 2024ல் மாநிலங்களவை எம்பிக்கள் 68 பேர் ஓய்வு: மாநிலங்களவை அலுவலகம் தகவல்
நடப்பாண்டில் (2024) வரும் ஏப்ரலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 68 மாநிலங்களவை எம்பிக்கள் ஓய்வு பெறவுள்ளனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். நடப்பாண்டில் (2024) வரும் ஏப்ரலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 68 மாநிலங்களவை எம்பிக்கள் ஓய்வு பெறவுள்ளனர். ஏப்ரலில் மட்டும் 57 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ், மன்சுக் மாண்டவியா உட்பட 9 அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர். நடப்பாண்டு பதவிகாலம் முடியும் 68 எம்பிக்களில் பாஜகவைச் சேர்ந்த 60 எம்பிக்களும் அடங்குவர்.
மாநிலம் வாரியாக உத்தரபிரதேசத்தில் 10 எம்பிக்களும், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்கள் தலா 6 எம்பிக்களும், மேற்கு வங்கம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 5 எம்பிக்களும், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா 4 எம்பிக்களும், ஒடிசா, தெலங்கானா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா 3 எம்பிக்களும், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 2 எம்பிக்களும், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அரியானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு எம்பியும் ஓய்வு பெறவுள்ளனர்.
அதேபோல் மேலும் 4 நியமன எம்பிக்களின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைய உள்ளது. பாஜக தலைவரான ஜே.பி நட்டாவின் பதவிக் காலமும் முடிவடையவுள்ளது. இந்த முறை அவர் தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அவர் வேறு மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் எனத் தெரிகிறது.