70 மணிநேர பணி கட்டாயம்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி விடாப்பிடி பேச்சு.. சுதா மூர்த்தியும் சப்போர்ட்..!
இன்போசிஸ் நாராயாணமூர்த்தி-யின் 70 மணிநேர கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகச் சமீபத்திய இண்டர்வியூவில் பேசியுள்ளார்.
இந்த இண்டர்வியூவில் நாட்டின் மூலம், அரசு மூலம், வருமான வரி செலுத்தியவர்கள் மூலம் பலன் அடைந்தவர்கள் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் கடுமையாக உழைக்க வேண்டிய பொறுப்பு அவர்களிடம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதனால் வாரம் 70 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய கருத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதே நேர்காணலில் இன்போசிஸ் நாராயாணமூர்த்தி உடன் கலந்துக்கொண்ட அவரது மனைவி சுதா மூர்த்தி, அவருடைய கருத்துச் சப்போர்ட் செய்யும் விதமாக என்னுடைய வயதில் நான் வாரத்தில் 70 மணிநேரம் பணியாற்றுகிறேன். வாரம் 70 மணிநேரம் பணியில் என்னுடைய கருத்து என்னவென்றால், உங்கள் வேலையை ரசித்து, விரும்பி பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றுவதும் விடுமுறை தான் என்று சுதா மூர்த்திப் பேசியுள்ளார்.இன்போசிஸ் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக வளர்ச்சி அடைய முக்கியமான காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனர் நாராயாணமூர்த்தித் தான், இன்போசிஸ் நிறுவனத்தைச் சுமார் 6 பேர் இணைந்து உருவாக்கியதாக இருந்தாலும் அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்து உச்ச நிலையைத் தொடும் வரையில் சிஇஓ-வாக இருந்து நிறுவனத்தை வழிநடத்திய முக்கியமான பங்கு நாராணயமூர்த்திக்கு உள்ளது. இதன் வாயிலாகவே இந்திய மக்கள் மத்தியிலும், தொழிற்துறையினர் மத்தியிலும் இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கும் அவரது குடும்பத்தின் மீது அளவு கடந்த மரியாதை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுதா மூர்த்தியின் புத்தகங்கள், அவருடைய எளிமையான பேச்சு ஆகியவற்றின் மூலம் இவருடைய புகழும் உச்சத்திற்குச் சென்றுள்ளது. மேலும் அவர்களது மகள் அக்ஷதா மூர்த்திப் பிரிட்டன் நாட்டின் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற காரணத்தால் ஒட்டுமொத்த நாராயணமூர்த்தியின் குடும்பமும் உலகம் முழுவதும் பிரபலமானார்கள்.ஆனால் சமீபத்தில் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் பேச்சு மூலம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். இன்போசிஸ் நாராயணமூர்த்தி – மோகன்தாஸ் பாய் உடனான தி ரெக்கார்ட் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்தியாவுக்குத் தற்போது சர்வதேச அளவில் கிடைத்துள்ள மரியாதையைப் பயன்படுத்தி அடுத்த 20 அல்லது 50 வருடங்களுக்கு இந்திய இளைஞர்கள் தினமும் 12 மணிநேரம் அதாவது வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்றி இந்தியாவை உலகின் 2வது அல்லது 3வது சக்திவாய்ந்த நாடாக உயர்த்த வேண்டும் என அறிவிறுத்தினார். இந்தக் கருத்துக்கு மாத சம்பளக்காரர்கள் மட்டும் அல்லாமல் பல தொழிலதிபர்கள், வல்லுனர்கள், மருத்துவர்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனம் எழுந்தது. காரணம் வாரம் 70 மணிநேரம் பணி என்றால் தினமும் 12 மணிநேர பணியாற்ற வேண்டும்.