இந்திய ஐடி துறையில் 70% ஊழியர்களுக்கு ஆபத்து.. எச்சரிக்கும் HCL வினீத் நாயர்..!
உலகம் முழுவதும் டெக் ஊழியர்கள் தினமும் பணிநீக்க அச்சத்தில் வாழ்ந்து வரும் வேளையில் HCL வினீத் நாயர் இந்திய ஐடி ஊழியர்களின் தூக்கத்தைத் தொலைக்கும் அளவுக்கு முக்கியமான ஒரு விஷயத்தை வெளியிட்டு உள்ளார்.
இந்திய ஐடி துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகளவில் இல்லை, அப்படி வேலைவாய்ப்பு கிடைத்தாலும் அதிகப்படியான சம்பளம் கிடைப்பது இல்லை, சம்பள உயர்விலும் மந்த நிலை, வேரியபிள் பே தொகையிலும் குறைப்பு. இந்த நிலையில் HCL வினீத் நாயர் என்ன சொல்லியிருக்கிறார்..?!
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு (AI) ஆக்கிரமித்து வரும் நிலையில், ஐடி துறையின் மூத்த அதிகாரியும், முன்னாள் HCL தலைமை செயல் அதிகாரியான வினீத் நாயர் இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்திய ஐடி துறையில் பணியாற்றுபவர்களை நிச்சயமாகப் பெரிய அளவில் பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பாதிப்பு எந்த அளவு இருக்கும்?: வினீத் நாயர் பாதிப்பு குறித்துக் கூறுகையில் ஏஐ மூலம் சுமார் 70 சதவீத இந்திய ஐடி ஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து இந்தியா டுடே பத்திரிகையுடனான உரையாடலில் வினீத் நாயர் கூறுகையில், ஆட்டோமேஷன், ஏஐ தாக்கம் காரணமாக, ஒரு வேலையை செய்ய நிறுவனங்களுக்கு முன்பு தேவைப்பட்டதை விட 70 சதவீதம் குறைவான மக்கள் இருந்தால் போதும் என கூறினார்.
கோடிங், டெஸ்டிங் செய்தல், மெயின்டனென்ஸ், பிரச்சனை நிறைந்த டிக்கெட்டுகளை கையாளுவது போன்ற ஊழியர்களின் திறன்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவால் எடுத்துக்கொள்ளப்படும் என்று HCL வினீத் நாயர் கணித்துள்ளார்.
இவரை போலவே சில வாரங்களுக்கு முன்னர், என்விடியா தலைமை செயல் அதிகாரி Jensen Huang செயற்கை நுண்ணறிவு குறியீட்டு எழுதுவதை மாற்றும் என்று குறிப்பிட்டிருந்தார்.
செயற்கை நுண்ணறிவு மனித திறனை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் காரணத்தால், எளிமையான வேலைகள் அனைத்தையும் AI கைப்பற்றும், இதன் படிப்படியான வளர்ச்சி கட்டாயம் பெரும் தாக்கத்தை வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும்.
இதனால் பணியாளர்களின் பணிநீக்கம் அதிகரித்து, ஊழியர்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் தள்ளப்படும், சொல்லப்போனால் இது இந்தியா ஐடி துறைக்கே பெரும் ஆபத்தாகவும், அதன் எதிர்காலத்திற்கும் ஆபத்தானது என்றும் வினீத் நாயர் தெரிவித்தார்.
இதேவேளையில் ஐடி நிறுவனங்கள் அதிக அனுபவம் கொண்ட ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, பிரஷ்ஷர்களை ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுத்து பணியில் அமர்த்தும் நடவடிக்கை துவங்கும் எனவும் எச்சரித்துள்ளார்.