|

இந்திய வம்சாவளியினர் உட்பட 700 பேர் மீது தவறாக குற்றச்சாட்டு: தபால் அலுவலகத் தலைவர் எடுத்துள்ள முடிவு

இந்திய வம்சாவளி கர்ப்பிணிப்பெண் உட்பட, 700க்கும் மேற்பட்டவர்கள், பணம் கையாடல் செய்ததாக தவறாக குற்றம் சாட்டி, அவர்களில் பலர் சிறை செல்லவும், சிலர் தற்கொலை முடிவை எடுக்கவும் காரணமாக இருந்த தபால் அலுவலகத் தலைவர், தனக்கு வழங்கப்பட்ட விருதை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

தவறாக குற்றம் சாட்டப்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்கள்

இந்திய வம்சாவளியினரான சீமா மிஸ்ரா, தபால் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிவந்த நிலையில், 74,000 பவுண்டுகளை திருடிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டது சீமா மட்டுமல்ல. அவருடன் பணியாற்றிய 700க்கும் மேற்பட்ட, sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்த தபால் அலுவலக பணியாளர்கள் மீதும் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்கள். அவர்களில் சீமாவும் ஒருவர். ஆனால், தான் கர்ப்பிணியாக இருந்ததால்தான் தன்னால் தற்கொலை செய்யமுடியவில்லை என்று கூறியிருந்தார் சீமா.

நடந்தது என்ன?

உண்மை என்னவென்றால், தபால் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் Horizon என்னும் சாஃப்ட்வேரின் பிரச்சினையால்தான் இந்த தபால் அலுவலக ஊழியர்கள் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விருதைத் திரும்ப பெறக் கோரி புகார் மனு

அந்த தவறுகளின் பின்னால் இருந்தவர்களில் ஒருவர், அல்லது, அந்த காலகட்டத்தில் தபால் அலுவலக முதன்மைச் செயல் அலுவலராக இருந்தவர், Paula Vennells என்னும் பெண். அவருக்கு பிரித்தானியாவின் உயரிய விருதான Order of the British Empire என்னும் விருது வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இவ்வளவு பெரிய தவறுக்குக் காரணமாக இருந்ததால், அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த உயரிய விருதைத் திரும்ப பெறவேண்டும் என்று கோரி 38 Degrees என்னும் அமைப்பு ஒன்லைனில் புகார் மனு ஒன்றை உருவாக்கியது.

தொலைக்காட்சித் தொடர் ஏற்படுத்திய எழுச்சி

இந்நிலையில், தபால் நிலைய ஊழியர்கள் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, Mr Bates vs The Post Office என்னும் தொலைக்காட்சித் தொடர் ஜனவரி 1ஆம் திகதி வெளியானது.

அந்தத் தொடர் மூலம் உண்மையை அறிந்து கொண்ட மக்களில் மில்லியன் கணக்கானோர், Paula Vennellsக்கு வழங்கப்பட்ட பிரித்தானியாவின் உயரிய விருதான Order of the British Empire என்னும் விருதைத் திரும்பப் பெறக்கோரி, அந்த புகார் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

தபால் அலுவலகத் தலைவர் எடுத்துள்ள முடிவு

பிரித்தானியாவில் இந்த விடயம் பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளதைத் தொடர்ந்து, தனக்கு 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பிரித்தானியாவின் உயரிய விருதான Order of the British Empire என்னும் விருதைத் திருப்பிக் கொடுக்க இருப்பதாக Paula Vennells அறிவித்துள்ளார்.

அந்த தொலைக்காட்சித் தொடர் வெளியானதைத் தொடர்ந்து, தபால் அலுவலகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேலானவர்கள் சட்டப்படி நடவடிக்கைகளைத் துவக்க முன்வந்துள்ளார்கள்.

இந்நிலையில், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ள Paula Vennells, உடனடியாக தான் தனக்கு வழங்கப்பட்ட Order of the British Empire விருதைத் திருப்பிக் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *