75ஆவது குடியரசு தினம் – மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்பு!

ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசுத் தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 26ஆம் தேதியான இன்று 2024 ஆம் ஆண்டிற்கான 75ஆவது குடியரசுத் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் தான் டெல்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து ராஜ் பாதைக்கு வருகை தந்தார். சாரட்டு வண்டியில் அழைத்து வரப்பட்ட குடியரசு தலைவர் டெல்லியில் ராஜ் பாதையில் 75ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதன் பின் விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டது. இதையடுத்து கப்பல், விமானம் மற்றும் இராணுவப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை திரௌபதி முர்பு ஏற்றுக் கொண்டார்.

குதிரைப்படை, பீரங்கிகளின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார். படைப்பிரிவுகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் தலைமை ஏற்று சென்றனர். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவப் பல் மருத்துவப் படையைச் சேர்ந்த கேப்டன் அம்பா சமந்த், இந்தியக் கடற்படையைச் சேர்ந்த சர்ஜ் லெப்டினன்ட் காஞ்சனா, லெப்டினன்ட் திவ்ய பிரியா ஆகியோருடன் மேஜர் ஸ்ருஷ்டி குல்லர் தலைமையில் அனைத்துப் பெண்களும் அடங்கிய ஆயுதப்படை குழு இந்திய விமானப்படை கர்தவ்யா பாதையில் முதன்முறையாக அணிவகுத்துச் சென்றது. மத்திய அமைச்ச்சர்கள், பிரதமர் மோடி, முப்படை தளபதிகள் என்று பலரும் கலந்து கொண்டனர். கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடியரசு தின நிகழ்ச்சிகளை நேரில் கண்டு ரசித்தனர்.

குடியரசுத் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோ கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் வெளிநாட்டு படையணியின் 2 வது காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த 30 இசைக்கலைஞர்கள் மற்றும் பிரான்ஸ் அணிவகுப்புக் குழுவை உள்ளடக்கிய வெளிநாட்டு படையினரின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *