திருச்சி நாகர்கோவில் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் சரியாக நடப்பதற்கு அதிகாரிகளின் செயல்பாடுகள் மிக மிக அவசியமானவை. இதற்கு வழி ஏற்படுத்தும் வகையிலும், நிர்வாக ரீதியிலான மாறுதலுக்காகவும் பணியிடமாற்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதையொட்டி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது., உள்துறை, கலால் வரித் துறை சிறப்பு செயலாளர் ஏ.சுகந்தி மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்த துறை இணை ஆணையர் எஸ்.பி.அம்ரித், உள்துறை, கலால் வரித் துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாடு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியர் பி.ரத்தினசாமி வணிக வரித்துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநர் வி.சரவணன், திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். கையடன்ஸ் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக செயல் இயக்குநர் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை வணிக வரித்துறை இணை ஆணையர் (உளவுத்துறை) வீர் பிரதாப் சிங் ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாடு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.