ஓட்டுநர் இல்லாமல் தானாக 80 கி.மீ. தூரம் ஓடிய சரக்கு ரயில்! பிரேக் போடாமல் டீ குடிக்கப் போனதால் விபரீதம்!

சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் தானை ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஜம்முவின் கதுவாவில் இருந்து பஞ்சாபின் ஹோஷியார்பூர் வரை சுமார் 80 கிமீ தூரம் அந்த ரயில் பயணித்துள்ளது. மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணித்த அந்த ரயில் 53 பெட்டிகளைக் கொண்டது.

ஓட்டுநர்கள் ரயிலை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றபோது மேனுவல் பிரேக்கைப் போடாமல் சென்றுவிட்டதால் ரயில் தானாக ஓடத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பஞ்சாபில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கட்டையைப் போட்டு ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு டிரைவர்கள் உட்பட 6 ரயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஓட்டுநர்களைத் தவிர, ஸ்டேஷன் சூப்பிரண்டு, பாயின்ட்மேன் மற்றும் மற்றொரு அதிகாரியும் அடங்குவர். ஆனால் அதற்குள், சரக்கு ரயில் தானாக ஓடியதன் வீடியோக்கள் வைரலாகிவிட்டன.

“கதுவா நிலையத்தில் தேநீர் இடைவேளைக்காக ஓட்டுநர்கள் ரயிலை நிறுத்திய பிறகு, கவனக்குறைவாக இன்ஜினை இயக்கத்திலேயே விட்டுவிட்டனர். இதனால் ரயில் தானாக பதான்கோட்டை நோக்கிச் சென்றது. ரயிலை நிறுத்தும் முயற்சி ஆரம்பத்தில் பலனளிக்கவில்லை. இது சுமார் 80 கிமீ தூரம் சென்ற பின்பு உஞ்சி பஸ்ஸியில் (பஞ்சாப்) நிறுத்தப்பட்டது” என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஃபெரோஸ்பூர் கோட்ட ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) சஞ்சய் சாஹு கூறுகையில், “ஜம்மு-ஜலந்தர் பிரிவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் எச்சரிப்பதற்கும், அந்த வழியாக வரும் அனைத்து ரயில்களையும் நிறுத்துவதற்கும், ஓட்டுநர் இல்லாத ரயில் கடந்து செல்ல அனுமதித்து அனைத்து கிராசிங்குகளையும் மூடுவதற்கும் ரயில்வே விரைந்து நடவடிக்கை எடுத்தது. ஓவர்ஹெட் கேபிள்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது” கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அனைத்து நிலையங்களும் ஓடும் ரயிலுக்கான சேவைத் தடங்களைத் திறந்து வைத்திருந்தன. காலை 7.25 மணி முதல் 9 மணி வரை ரயில் ஓட்டுநர் இல்லாமல் ஓடியதால், உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் ஏதும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்றும் சாஹு தெரிவித்துள்ளார்.

எந்த ரயில் நிலையத்திலும் ரயில் நிற்கும் போது, அது தானாக நகராமல் இருக்க அதன் சக்கரங்களுக்கு அடியில் மரக்கட்டைகள் வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். டிசம்பர் 2014 இல், சதாப்தி எக்ஸ்பிரஸின் நான்கு காலி பெட்டிகள், அதன் சக்கரங்களுக்கு அடியில் மரக்கட்டைகள் இல்லாததால், பின்னோக்கிச் சென்று தடம் புரண்டன.

மே 2010 இல், ஓட்டுநர் இல்லாத சதாப்தி எக்ஸ்பிரஸ் கல்காவிலிருந்து அருகிலுள்ள சண்டிமந்திர் வரை சென்று விபத்துக்குள்ளானது. ஜூன் 2015இல், சண்டிகர் ஸ்டேஷனில் ஓட்டுநர் இல்லாத பயணிகள் ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சக்கரங்களுக்கு அடியில் மரக்கட்டை வைக்கப்படவில்லை என்பதே காரணம் என்று தெரியவந்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *