டெல்லியில் 80% பேர் போதையில் வாகனம் ஓட்டுவதாக ஒப்புதல்! கருத்துக்கணிப்பில் அதிர்ச்சித் தகவல்!

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான சமூகம் (CADD) என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், டெல்லியில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தக் கருத்துக்கணிப்புக்குப் பதிலளித்த 30,000 பேரில் 81.2% பேர் மது போதையில் வாகனம் ஓட்டியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 வரை நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பு, பலதரப்பட்ட பங்கேற்பாளர்களிடமிருந்து பதில்களைப் பெற்றது. 20,776 ஆண் மற்றும் 9,224 பெண்கள் பதிலளித்தார்கள். இவர்கள் வாகனம் ஓட்டுவதில் தங்களின் அனுபவங்கள் மற்றும் நடத்தைகள் பற்றிய பகிர்ந்துகொண்டுள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை ஒப்புக்கொள்பவர்களில் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள் இருவருமே இருக்கிறார்கள்.

மதுபோதையால் அதிகரித்த சாலை விபத்துகள்:

மத்திய அரசால் வெளியிட்டப்பட்ட 2022ஆம் ஆண்டிற்கான சாலை விபத்துத் தரவுகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அதன்படி மதுபோதையில் வாகனம் ஓட்டுவது இந்தியாவில் சாலை விபத்துகளில் குறிப்பிடத்தக்க காரணமாக உள்ளது.

தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் 3,268 விபத்துக்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்டுள்ளன. இது அந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட விபத்துக்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்குக்குச் சமம். மேலும், 1,503 மரணங்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த மொத்த சாலை விபத்து இறப்புகளில் சுமார் 11% ஆகும்.

மோட்டார் வாகனச் சட்டம்:

மோட்டார் வாகனச் சட்டம் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பான போக்குவரத்து விதிமுறைகளைக் கூறுகிறது. போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் போதை அளவை மதிப்பிடுவதற்கு இரத்தத்தில் ஆல்கஹால் செறிவை அறிவதற்கான சோதனைக்கு உட்படுத்தலாம்.

பொதுவாக, மூச்சுப் பகுப்பாய்வு கருவி மதுவின் அளவைக் கண்டறிய போக்குவரத்துப் பொலீசாரால் பயன்படுத்தப்படுகிறது. 100 மில்லி இரத்தத்தில் 30 மி.கி.க்குக் குறைவான ஆல்கஹால் அளவு இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகக் கருதப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *