இரண்டரை ஆண்டுகளில் 90 லட்சம் காப்பீடுகள் – ‘போன் பே’ அசத்தல்

பெங்களூரு: கடந்த 2021 செப்டம்பர் மாதம் முதல் சுமார் 90 லட்சம் காப்பீடுகளை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்துள்ளதாக ஃபின்டெக் நிறுவனமான போன்பே தெரிவித்துள்ளது.
இதில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் காப்பீடுகள் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
பணம் அனுப்ப மற்றும் பெற மட்டுமல்லாது கூடுதலாக பல்வேறு சேவைகளை இணையவழியில் வழங்கி வருகின்றன இந்த ஃபின்டெக் நிறுவனங்கள். அந்த வகையில் போன்பே நிறுவனம் கடந்த 2020-ல் காப்பீடு சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் வணிக ரீதியான உரிமத்தை பெற்றது. அதையடுத்து டிஜிட்டல் முறையில் காப்பீடுகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது.
ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, மோட்டார் வாகன காப்பீட்டை போன்பே விற்பனை செய்து வருகிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இருசக்கர வாகன டிஜிட்டல் காப்பீட்டில் 65 சதவீத வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாகவும் போன்பே தெரிவித்துள்ளது.
பயனர்கள் மிக எளிதாக இதன் மூலம் காப்பீட்டை பெறலாம். அதில் கேட்கப்படும் விவரங்களை கொடுத்து நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் காப்பீடு சார்ந்த ஆவணத்தை டிஜிட்டல் வழியில் பெற்றுக் கொள்ளலாம் என்பது இதன் சாதகம். முக்கியமாக காப்பீட்டடு தேதி காலாவதியானால் கூட வாகனத்தின் விவரங்கள் மற்றும் பான் கார்டு எண்ணை கொடுத்து எளிதில் காப்பீடு பெறலாம். இதற்கு சில நாட்கள் எடுக்கும்.
தங்கள் வணிகத்தை விரிவு செய்யும் நோக்கில் நுகர்வோர் கடன் வழங்கும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது போன்பே. கடந்த ஆண்டு நவம்பர் முதல் போன்பே நிறுவனத்தின் நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் முன்னாள் எஸ் பேங்க் தலைமை டிஜிட்டல் அதிகாரி ரிதேஷை சிஇஓ-வாக நியமித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.