‘மிமிக்ரி குறித்து தான் விவாதிப்பீர்களா?’ – ராகுல்காந்தி காட்டம்!
பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் 151 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (டிச.19) காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது, திரிணமுல் காங்கிரஸின் எம்பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதை போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினார். அங்கிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது செல்போனில் இதனை வீடியோ எடுத்தார்.
கல்யாண் பானர்ஜியின் இந்தச் செயலையும், இதை தடுக்காத ராகுல் காந்தியையும் ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இந்த சம்பவம் குறித்து, மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர் கூறுகையில், ‘மாநிலங்களவைத் தலைவருக்கும், மக்களவைத் தலைவருக்கும் வேறுபாடு உண்டு. அரசியல் கட்சிகளுக்குள் பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால், மாநிலங்களவைத் தலைவரை கேலி செய்யும் எம்பியை மற்றொரு கட்சியின் மூத்த தலைவர் வீடியோ எடுக்கிறார். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆபத்தானது, வெட்கக்கேடானது.’ என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பி. டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரைப் போல் மிமிக்ரி செய்து நடித்து அவமதித்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி,
‘யார் அவமதித்தார்கள்? அவமதித்ததாக எப்படி சொல்கிறீர்கள்? எம்.பி.க்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களை வீடியோ எடுத்தேன். அந்த வீடியோ எனது மொபைலில் உள்ளது. நான் அதனை யாருக்கும் பகிரவில்லை. அதேநேரத்தில், அந்த நிகழ்வை மீடியாவும் வீடியோ எடுத்தது. யாரும் யார் குறித்தும் எதுவும் சொல்லவில்லை.
நாடாளுமன்றத்தில் இருந்து 150 எம்.பிக்களை தூக்கி வெளியே வீசி இருக்கிறார்கள். அது குறித்து ஊடகங்களில் எந்த விவாதமும் இல்லை. அதானி விவகாரம் குறித்தோ, ரஃபேல் விவகாரம் குறித்தோ, வேலைவாய்ப்பின்மை குறித்தோ எந்த விவாதமும் நடப்பதில்லை. எங்கள் எம்.பிக்கள் மனம் உடைந்து வெளியே அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் மிமிக்ரி குறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்’ என கூறினார்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்களின் கேள்விக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, ‘நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். நடந்ததை இயல்பானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ராகுல்காந்தி இதனைக் காட்சிப்படுத்தாவிட்டால் இது இவ்வளவு பெரிய சர்ச்சையாகவே ஆகியிருக்காது’ என்றார். அப்போது நிருபர்கள், அப்படியென்றால் நீங்கள் அந்தச் சம்பவத்தை ஆதரிக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பபட, ‘நான் மேற்கு வங்கம் சார்ந்த பிரச்னைகளைத் தவிர வேறு எது பற்றியும் பேச விரும்பவில்லை’ என்றார்.