‘ஜர்னி’ வெப்தொடரை குடும்பத்துடன் பார்க்கலாம். இயக்குனர் சேரன் பேட்டி
சென்னை: தமிழில் 11 படங்களை எழுதி இயக்கியவர், சேரன். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், சில படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், 4 வருட இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதி இயக்கியுள்ள முதல் வெப்தொடர், ‘ஜர்னி’. 9 எபிசோடுகள் கொண்ட இத்தொடர், வரும் 12ம் தேதி சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாகிறது.
குறிப்பிட்ட ஒரு வேலைக்காக போட்டியிடும் 5 பேரின் வாழ்க்கையை மையப்படுத்தி தொடர் உருவாகியுள்ளது. சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், திவ்யபாரதி, கலையரசன், காஷ்யப் பார்பயா, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து, வேல.ராமமூர்த்தி, அனுபமா குமார், ‘நாடோடிகள்’ பரணி, ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, அஞ்சு குரியன் நடித்துள்ளனர்.
என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசை அமைத்துள்ளார். வெப்தொடர் இயக்கியது குறித்து சேரன் கூறியதாவது: சினிமாவில் 2 அல்லது இரண்டரை மணி நேரத்தில் கதை சொல்கிறோம். வெப்தொடரில் நீளமான கதையை விரிவாகவும், மிக அழுத்தமாகவும் சொல்லலாம். ‘ஜர்னி’ என்பது அனைவருக்குமான கதை. யாராவது ஒருவர் இச்சம்பவத்தை கடந்து சென்றிருக்க முடியும்.
பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், காஷ்யப் பார்பயா, திவ்யபாரதி ஆகிய 5 பேர் பற்றிய கதை இது. விவசாயத்தின் அவசியம் குறித்தும், அது ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் இல்லை, பெண்களுக்குமானது என்பதையும் நான் பேசியிருக்கிறேன். விவசாயத்தைப் பற்றி பேசும் கேரக்டராக திவ்யபாரதி நடித்தார். இந்ததொடரை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்.