வீரப்பனிடம் நடிகர் ராஜ்குமார் அனுபவித்த துயரங்கள் -சிவராஜ் குமார்

ந்தன கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்திருந்தார். 108 நாட்களுக்குப் பின்னர் அவர் மீட்கப்பட்ட நிலையில், ராஜ்குமார் அனுபவித்த துயரங்களை அவரது மகன் சிவராஜ் குமார் பகிர்ந்துள்ளார்.
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகர் ராஜ்குமார். இவரது இரு மகன்கள் புனித் ராஜ்குமார் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்கள். இவர்களில் புனித் ராஜ்குமார் சமீபத்தில் காலமானார். சிவராஜ் குமார் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார் நடித்த கேமியோ ரோல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அவர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் 12ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது-

அப்பாவை வீரப்பன் கடத்திச் சென்ற போது சிவாஜி, ரஜினி, அர்ஜுன், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி என பலரும் மிகுந்த வேதனைப்பட்டனர். அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார்கள். அப்பாவை வீரப்பன் கடத்திய சமயத்தில் அவருக்கு முழங்கால் வலி பிரச்சனை அதிகம் இருந்தது. அவரால் நீண்ட தூரம் நடக்க முடியாது. ஆனால் காட்டுக்குள் அவர் நடந்து கொண்டே இருந்திருக்கிறார்.

சுற்றிலும் காடு, எங்கும் இருட்டு, ஆறுகள் ஓடும் சத்தம், அத்துடன் மிருகங்கள் கத்தக்கூடிய சத்தம், அவ்வப்போது சிறிது சூரிய வெளிச்சம். இப்படித்தான் அவருடைய ஒவ்வொரு நாட்களும் இருந்துள்ளன. இதே போன்று தான் அவர் 108 நாட்கள் வீரப்பனுடன் காட்டில் இருந்திருக்கிறார். அங்கிருந்து அவர் மீட்கப்பட்டு வீட்டுக்கு வந்த போதும், அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்கு சிறிது காலம் ஆனது.

காட்டில் சுற்றிலும் இருட்டாக இருந்தது. இங்கு வீட்டில் இருந்த மின்விளக்குகளை அவர் பார்த்தபோது அவருக்கு மிகப்பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. இருப்பினும் யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்து செய்து அவர் துயரத்தில் இருந்து மீண்டு வந்தார். இவ்வாறு சிவராஜ் குமார் கூறியுள்ளார்.

கடந்த 2000 -ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டார். அவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் காஜனூர் ஆகும். அங்குள்ள அவரது பண்ணை வீட்டில் ராஜ்குமார் தங்கி இருந்தபோது ஆயுதங்களுடன் வந்த வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜ்குமாரை கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 108 நாட்களுக்குப் பின்னர் அவர் வீரப்பனால் விடுவிக்கப்பட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *