சமந்தா மாதிரி நடிக்க வேண்டும். நடிகை பவ்யா த்ரிக்கா ஆசை
சென்னை: கடந்த ஆண்டு திரைக்கு வந்த ‘ஜோ’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர், பவ்யா த்ரிக்கா. அவர் கூறியதாவது: சென்னையில் வசிக்கும் பஞ்சாபி பெண்ணான நான், தமிழில் சரளமாகப் பேசுவேன்.
நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தாலும், படிப்பிலும் அதிக கவனம் செலுத்தி, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பட்டம் பெற்றேன்.
சிறுவயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அதற்கு எனது தந்தை உறுதுணையாக இருந்தார். அவரது உதவியால் தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைப் பார்த்து நடிப்பையும், தமிழில் பேசவும் கற்றுக்கொண்டேன். பிறகு வாய்ப்பு தேடியபோது, ‘கதிர்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பிறகு ரியோ ராஜ் நடித்த ‘ஜோ’ படத்தில் நடித்தேன். வெற்றி என்பது சராசரியாக இருக்கக்கூடிய நடிகைகளுக்கு எந்தளவுக்கு மாறும் என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது நான் எங்கே சென்றாலும், மக்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு அங்கீகரிக்கின்றனர்.
அதை நினைத்து மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அடுத்து சில புதுப்படங்களில் நடிக்கிறேன். சினிமாவில் எனக்கு சமந்தாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்த அவர், தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தியில் முன்னணி இடத்தில் இருக்கிறார். அதனால்தான் அவரை எனது இன்ஸ்பிரேஷனாக நினைக்கிறேன்.