Bhagyaraj Love: முதல் மனைவி கொடுத்த பரிதவிப்பு; தனிமை தீயில் வாடிய பாக்யராஜ்; கைப்பிடித்து இதம் கொடுத்த பூர்ணிமா!
இது குறித்து கல்யாணமாலை நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், “முதல் மனைவி பிரவீனா மறைவுக்கு பின்னால், கொஞ்சம் மனசு சரியில்லாமல் இருந்தது.
இதனையடுத்து கோவா, மும்பை என சுற்றி வந்து கொண்டிருந்தேன்.
அப்போது மும்பையில், பிஆர்ஓ செல்வம் நான் தங்கி இருந்த ஹோட்டலில் தங்கி இருந்தார். எதேர்ச்சையாக அவரை சந்திக்க நேர்ந்தது. என்ன இங்கு வந்திருக்கிறீர்கள் என கேட்டபோது, பூர்ணிமா இங்கு வந்திருக்கிறார். அவர் மலையாள படம் ஒன்றிற்காக, பாரிஸ் செல்கிறார் என்று கூறி, அவரை வழி அனுப்ப வந்தேன் என்றார்.
செல்வம் பூர்ணிமாவிடம் சென்று நான் இங்கு வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அப்போது பூர்ணிமா எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு டிபன் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று சொன்னார்.
நான் அதற்கெல்லாம் நேரமில்லை வேண்டுமானால் ஒரு டீ சாப்பிட்டு விட்டு செல்கிறேன் என்றேன். அப்போது நவராத்திரி என்பதால், அதனை பற்றி பூர்ணிமா பேசிக் கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
உடனே எனக்கு நாம் ஏன் இவரை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்ற யோசனை வந்தது. பூர்ணிமாவிடம் இதை கேட்பதற்கு எனக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது. சந்திப்பின் முடிவில் அவர் என்னை கார் ஏற்றி விட வந்தார். அப்போது நான் பூர்ணிமாவிடம் பாரிஸ் சென்று விட்டு எனக்கு ஒரு போன் செய்கிறாயா? என்று கேட்டேன்.
ஆனால், பூர்ணிமாவிடம் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு கூட எந்தவித பதிலும் வரவில்லை. இந்த நிலையில்தான் என்னுடைய உதவியாளர் ஒருவர், பூர்ணிமா என்ற ஒருவர் தொடர்ந்து கால் செய்து கொண்டிருப்பதாக சொன்னார். உடனே அடேய்… என்று கூறி திட்டிவிட்டு, பூர்ணிமாவை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னேன்.
அவர் அம்மாவிடம் பேசுங்கள் என்றார். அம்மாவை கேட்டபோது அவர் அப்பாவிடம் பேச வேண்டும் என்றார். அப்பாவை கேட்டபோது அவர் தோப்பனாரிடம் பேச வேண்டும் என்றார் தோப்பனாரிடம் கேட்டபோது, மச்சினன் வந்து விடட்டும் என்றார். பின்னர், அவர்கள் என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டு எங்கள் கல்யாணத்திற்கு சம்மதித்தார்கள்.” என்று பேசினார்.