பத்திரிகையாளர் கேள்வியால் கடுப்பான நடிகர் விஜய்சேதுபதி..!
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைப், ராதிகா சரத்குமார், சண்முக ராஜேஷ்வரன் ஆகியோரின் நடிப்பில் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்.இந்தப்படத்தின் புரமோஷனுக்காக சென்னையில் பத்திரிகையாளர்களை (ஜனவரி 7) மாலை படக்குழுவினர் சந்தித்தனர்.
இதில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, “96 படம் பார்த்துவிட்டு இயக்குநர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அரை மணிநேரம் பேசினோம். அவருடைய முதல் படம் என்னுடைய பிறந்தநாள் அன்று வெளியானது. அப்போது என் நண்பர் ஒருவர் என்னிடம், ராம்கோபால் வர்மாவின் உதவி இயக்குநர், ஸ்ரீராம் ராகவன் படம் இயக்கியிருக்கிறார் என கூறினார். அவரின் முதல் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பின்னர் ராகவன் என்னிடம் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் கதை சொன்னார், பிடித்திருந்தது.
கத்ரீனா கைஃபை நேரில் பார்த்தது எனக்கு ஒரு ஆச்சரியம். நம்மை விட சீனியர் நடிகை என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனால் அவரிடம் எந்த தலைக்கனமும் இல்லை. அவருடன் பணியாற்றியது மிகவும் கம்பர்டபிளாக இருந்தது. நாங்கள் எல்லோரும் படத்தைப் பார்த்துவிட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.
மேலும், “இந்தி சினிமாவில் நடிக்க சென்ற போது சில படங்களோடு எனக்கான வாய்ப்பு முடிந்துவிடும் என நினைத்தேன். ஆனால் இந்தி ரசிகர்கள் எனது நடிப்பை ரசித்து ஏற்றுக்கொண்டதை நான் எதிர்பார்க்கவில்லை.நான் பேசும் இந்திமொழி உச்சரிப்பு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் பார்ஸி, மற்றும் ஜவான் படங்கள் என்னை இந்தி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அந்தப் படங்களின் வெற்றி நான் பேசும் இந்தியை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது.
அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர், “தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இந்தி பேசக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் சொல்லுங்கள் தமிழர்கள் இந்தி படிக்கனுமா வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியால் கடுப்பான விஜய்சேதுபதி அந்த பத்திரிகையாளரிடம், “ஆமிர்கான் சார் வந்தபோது கூட இந்தி தொடர்பான இதே கேள்வியை கேட்டீர்கள். அந்த கேள்வி எதற்கு என்பது எனக்குப் புரியவில்லை. இப்போது என்னிடமும் கேட்கிறீர்கள்.தமிழ்நாட்டில் இந்தியை படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொல்கிறோம். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. உங்களின் கேள்வியே தவறானது. இங்கே எல்லோரும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் அதை தடுக்கவில்லை என்று விஜய்சேதுபதி சூடாக பதிலளித்தார்.