Nayanthara: பிரியாணி பண்றதுக்கு முன்னாடி நமாஸ்.. நயன் மீது மும்பை போலீசில் புகார்! – நடந்தது என்ன?
நயன்தாராவின் 75வது படமாக உருவாகி டிசம்பர் 1ஆம் தேதி வெளியான படம் அன்னப்பூரணி. இந்தப் படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கியிருந்தார்.
விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற போதிலும் மிக்ஜாம் புயல் காரணமாக படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் ஓய்ந்த பிறகு படம் பிக்கப் ஆகும் என நினைத்த படக்குழுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதைத்தொடர்ந்து நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக நயன்தாரா மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக மும்பை காவல்நிலையம் ஒன்றில் அளிக்கப்பட்ட புகாரில் இந்தத்திரைப்படம் வால்மீகி ராமாயணத்தை தவறாக சித்தரித்துள்ளதாகவும், அது மட்டுமல்லாமல் கடவுள் ராமரை விமர்சனம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அன்னப்பூரணி திரைப்படத்தில் பிராமணப்பெண்ணாக நடித்திருக்கும் நயன்தாரா, புகழ்பெற்ற சமையல் கலைஞராக மாற வேண்டும் என்று விரும்புகிறார். அந்த கனவை நனவாக்க முற்படும் போது, அதில் அசைவ உணவை சமைக்க அவர் படும் சவால்களை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகி இருந்தது.
இதில் ஒரு காட்சியில் சமையல் போட்டி ஒன்றில் நயன் ஈடுபடும் போது, நீ செய்யும் பிரியாணி சுவையாக வரவேண்டும் என்றால், நீ சமைக்கும் முன்னர் நமாஸ் செய்ய வேண்டும் நண்பர்கள் சொல்வர். அவர்கள் சொல்வது போலவே நயன் செய்வார்.
இந்த காட்சி இந்து மத சடங்குகளை புண்படுத்துவதாக கூறி சர்ச்சை எழுந்திருக்கிறது. கூடவே, படத்தில் நடிகர் ஜெய் ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று கூறியதும் பிரச்சினைக்கு வித்திட்டு இருக்கிறது. இவற்றை அடிப்படையாக வைத்து நயன்தாரா, ஜெய் படக்குழுவினர் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் ஆகியோரின் மீது இந்த புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.