சென்னை, மும்பைக்கு கிடைத்த மெட்ரோ அங்கீகாரம்.. பெங்களூர்-க்கு கிடைக்கல.. ஏன் தெரியுமா..?
இந்தியாவில் இருக்கும் முக்கிய நகரங்களில் பெங்களூரு எவ்விதமான சந்தேகத்திற்கு இடமின்றி, இன்றைய நவீன உலகளாவிய பெருநகரத்தின் அனைத்து அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் ஐடி நகரம் என்ற தனிப் பெருமையைக் கொண்டு உள்ளது பெங்களூர். பெங்களூர் காஸ்மோபாலிட்டன் கலாச்சாரம், உயர்தர உள்கட்டமைப்பு, போக்குவரத்துச் சேவைகள், அதிகப்படியான மக்கள் தொகை ஆகியவை இருப்பினும் மெட்ரோ நகரமாக வருமான வரி சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறவில்லை. பெங்களூர் மெட்ரோ நகரமாக அங்கீகாரம் பெறாத காரணத்தால் வருமான வரி சட்டங்களின் கீழ் வீட்டு வாடகை கொடுப்பனவில், வரி விலக்கு பெற முடியாமல் நிற்கிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? இந்தியாவின் டாப் 7 பெரு நகரங்களில் இருப்பது போலவே பெங்களூரிலும் அதிக மக்கள் தொகை, பொருளாதாரச் செயல்பாடு மற்றும் வேகமான வாழ்க்கை முறை போன்ற பெரு நகரங்களுக்கே உண்டான பண்புகளைப் பெங்களூர் பெற்றுள்ளது. குறிப்பாக உலகின் எந்த நகரத்திலும் இல்லாத வகையில் பெங்களூரில் அதிகப்படியான டிராபிக் உள்ளது, இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது. சரி பெங்களூர் வருமான வரி துறையால் மெட்ரோ நகரமாக அங்கீகாரிக்கப்படாத காரணத்தால் என்ன பிரச்சனை..? பொதுவாக மெட்ரோ நகரங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில், அடிப்படை சம்பளத்தில் (Basic salary) சுமார் 50 சதவீதத்தை HRA பிரிவில் வரி விலக்கு பெற முடியும், இதுவே மெட்ரோ அல்லாத நகரங்களில் அடிப்படை சம்பளத்தில் சுமார் 40 சதவீதத்தை HRA பிரிவில் வரி விலக்கு பெற முடியும். சரி பெங்களூர் மெட்ரோ நகரமாக அங்கிகாரிக்கப்படாதது ஏன்?: வருமான வரித்துறையும், மத்திய அரசும் 1990க்கு பின்பு இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் பட்டியலை அப்டேட் செய்யவேயில்லை. இதனால் பெங்களூர் கடந்த 30 வருடத்தில் பதிவு செய்த பிரம்மாண்ட வளர்ச்சியைக் கணக்கில் வரமாலேயே உள்ளது. வருமான வரிச் சட்டம் 1962, பிரிவு 2A கீழ் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகியவை மட்டுமே மெட்ரோ நகரங்களாக அங்கிகாரித்துள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் பெங்களூர் மெட்ரோ நகரமாக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் பெங்களூர் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாகவும் இது விளங்குகிறது, பெங்களூர் வீட்டு வாடகையை பார்க்கும் போதும் இதுமுக்கியமான தேவையாக மாறியுள்ளது.