ஜனவரி 15 முதல் அரிசி விலை குறைகிறதா? அடுத்த அதிரடியில் குதிக்கும் மத்திய அரசு
சில்லறை விற்பனையில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்வதை கட்டுப்படுத்தும் முகமாக, மத்திய அரசு அடுத்த அதிரடியில் இறங்குகிறது.
கோதுமை, அரிசி ஆகியவை இந்தியர் மத்தியில் தவிர்க்க இயலாத உணவுகளாக விளங்குகின்றன. இந்தியாவின் வடக்கே கோதுமையும், தெற்கே அரிசியும் பிரதான உணவுகளாக ஆக்கிரமித்துள்ளன. இவற்றின் விலை உயர்வு என்பது ஒட்டுமொத்தமாக உணவுப்பொருட்களின் விலை உயர்வாக பாதித்து, சாமானியரின் பட்ஜெட்டை பதம் பார்க்கக்கூடியவை. இதற்காக கோதுமை விலை உயர்வைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அரசு, அடுத்து அரிசியின் விலை உயர்வுக்கு எதிராக சாட்டை வீச உள்ளது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே அரிசியின் சில்லறை விற்பனை விலையின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் நீடிக்கிறது. அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான மத்திய அரசின் முந்தைய முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதோடு, இந்திய உணவு கழகம் சார்பிலும் அவசியமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. நடப்பு காரீஃப் பருவத்தில் அரிசி போதுமான விளைச்சல் கண்டுள்ளதால் வரத்துக்கு தட்டுப்பாடில்லை. ஆனபோதும் அதன் விலை கட்டுக்குள் வராததின் பின்னணியில் சந்தை விற்பனையில் அரங்கேறும் தகிடுதத்தங்கள் காரணமாக இருக்கக்கூடும் என அரசு சந்தேகிக்கிறது.
அரிசி மொத்த மற்றும் சில்லறை விற்பனையில், உரிய காரணமின்றி தென்பட்ட திடீர் விலை உயர்வுக்கு எதிராக, கடந்த மாதமே மத்திய உணவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. முன்னதாக கோதுமை மற்றும் கடலைபருப்பின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக அதன் விநியோகத்தில் அரசே நேரடியாக தலையிட்டது. ‘பாரத் தால்’, ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரிலான திட்டங்கள் வரவேற்பு பெற்றன. இதன் மூலம் கடலைப்பருப்பு கிலோ ரூ60-க்கும், கோதுமை மாவு கிலோ ரூ27.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதற்காக மானியம் வழங்கியும், விவசாயிகளை நேரடியாக விற்பனையில் ஈடுபடுத்தியுமாக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டது. அந்த வகையில் தற்போது அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதிலும் களமிறங்கலாமா எனவும் அரசு பரிசீலித்து வருகிறது.
முதற்கட்ட ஏற்பாடாக அரிசி விநியோக சங்கிலியை ஆராயவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் சாத்தியங்களை பரிசீலிக்கவும், அரிசி வர்த்தகர்கள், இருப்பு வைத்திருப்போர், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேச மத்திய உணவு அமைச்சர் பியூஷ் கோயல் முடிவு செய்திருக்கிறார். லாபமீட்டுவதற்காக வர்த்தகர்கள் மேற்கொள்ளும் விற்பனை விலை வரம்பில் தலையிடுவது குறித்தும் அரசு அப்போது எச்சரிக்கை விடுக்க இருக்கிறது. பிரதமர் மோடி உத்தரவின் பேரில், ஜனவரி 15 அன்று நிகழும் இந்த சந்திப்பை அடுத்து அரிசி விலை குறைவதற்கான சாத்தியங்களை அதிகம் எதிர்பார்க்கலாம்.