என்ன மனுஷன்யா நீ…பெற்ற குழந்தைகளுக்கு கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து கொடுத்த கொன்ற தந்தை..!
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் கடலரசு (32). இவருக்கும், தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜனனி (23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு திவான்ராஜ் (4) என்ற மகனும், நிவன்திக்கா (2) என்ற மகளும் இருந்தனர். இதில் திவான்ராஜ் என்.தட்டக்கல் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில், ஜனனிக்கும், கடலரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனனி கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் இலக்கியம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இரு குடும்பத்தினரும் கணவன் – மனைவியை சமாதானம் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் ஜனனி, என்.தட்டக்கல் கிராமத்திற்கு வந்து கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி கடலரசு பெரியமலை தீர்த்தம் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றார். வழியில் மலை அடிவாரத்தில் வழங்கப்பட்ட பிரசாதத்தை வாங்கிய கடலரசு அதில் விஷம் கலந்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் குழந்தைகள் 2 பேரும் அங்கேயே மயங்கி உயிருக்கு போராடி துடிதுடித்துள்ளனர். விஷம் கலந்த பிரசாதத்தை தின்றும் குழந்தைகள் சாகவில்லை என எண்ணிய கடலரசு 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி ஜனனிக்கும் விஷம் கலந்த பிரசாதத்தை கொடுத்து விட்டு, அவரும் தின்று தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜனனி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கணவன், மனைவி 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து போலீசார், இறந்த 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலரசு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் குணமடைந்துள்ளார். இந்நிலையில் நாகரசம்பட்டி போலீசார், 32 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் கடலரசுவை கைது செய்தனர்.