வன்னியர் இடஒதுக்கீடு.. பாமக போராட்டத்தை நினைவூட்டும் ராமதாஸ்! தமிழ்நாடு அரசுக்கு கெடு விதிச்சுட்டாரே
சென்னை: 10.5% இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க.
நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டு, இன்னும் 3 நாட்களில் ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் எட்டப்பட வில்லை. சொல்லுக்கு சொல் சமூகநீதி என்று பேசும் தமிழக அரசு, இதில் காட்டும் தேவையற்ற தாமதம், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் ஆர்வம் இல்லையோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டில், பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து பெரும் போராட்டங்களை நடத்திய பிறகு, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று கடந்த 2022 மார்ச் 31&ஆம் நாள் தீர்ப்பளித்தது. அப்போதே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த தமிழக அரசு, ஆனாலும் அதன்பின் 9 மாதங்கள் தாமதமாக 2022 நவம்பர் 17-ஆம் நாள் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்தது.
அதன்பின் இரு மாதங்கள் கடந்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாளில் தான், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியவாறு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் அரசுக்கு பரிந்துரைப்பதற்கான கூடுதல் ஆய்வு வரம்பை (Additional Terms of Reference) பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாளுக்குள் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய பரிந்துரை எதையும் ஆணையம் வழங்கவில்லை. அதன்பின் 6 மாதம், 3 மாதம் என இரு முறை கூடுதல் காலக்கெடு வழங்கப்பட்டும் கூட வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க அரசும், ஆணையமும் முன்வரவில்லை.