தனிநபர் வருமானத்தில் தடுமாறும் இந்தியா! மத்திய அரசின் முரண் தகவல்கள்
மத்திய அரசு முறையாகத் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை என்று திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவும் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் சீராக இல்லை என்பதே இந்தச் சர்ச்சையின் முக்கியத்துவம்.
ஆனால், மத்திய அரசு பொய்யான ஜிடிபி அளவை சொல்லி நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளதாகச் சொல்கிறது. உண்மையில் மத்திய அரசிடம் நிதியே இல்லை. அதுவே நிஜம் என்கிறார் பொருளாதார ஆலோசகர்கள் ஆனந்த் சீனிவாசன்.
மேலும் தனிநபர் வருமானத்தில் இந்தியாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் சொல்கிறார். பங்களாதேஷ் நாட்டைவிட இந்தியா இந்த விசயத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அது கவலையளிக்கும் விசயம் என்கிறார் அவர்.
தொடர்ந்து விளக்கம் அளித்த அவர், “ஜிடிபி என்று ஒன்றைச் சொல்கிறார்கள். நான் அது குறித்த படித்த புத்தகங்களில் Deflator என்பதை Wholesale Price Deflator ஐ வைத்து அளவிடலாம். அல்லது Consumer Price Deflator ஐ வைத்து அளவிடலாம். பொதுவாகப் பலரும் Consumer Price Deflator ஐ வைத்துத்தான் அளவிடுகிறார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் Consumer Price Deflator ஐ முறையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் Consumer Price Deflator என்பது அதாவது மக்கள் நேரடியாகப் பணம் கொடுத்து வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு என இதனைத் தமிழில் கூறலாம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக 6% ஆக உள்ளது.
ஆனால் Wholesale Price Deflator என்பது நெகடிவ் இல் உள்ளது என்கிறார்கள். அதை என்னால் நம்ப முடியவில்லை. Deflator 2% ஆக உள்ளது என்று ஒன்றிய அரசு சொல்கிறது. ஆக, Nominal growth என்பது 9% ஆக உள்ளது. Real growth 7% என்கிறார்கள். இந்தக் கணக்குகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
சந்தைக்குச் சென்று நீங்கள் ஒரு பொருளின் விலைவாசியை விசாரித்தால், எந்தப் பொருளும் 2% அளவில் விலை உயர்ந்திருப்பதைப் போல் தெரியவில்லை. அரவிந்த் சுப்பிரமணியமும் ஜோஷ் ஃபெல்மேன் இணைந்து ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
இந்த அரவிந்த் சுப்பிராணியம் என்பவர் அருண் ஜெட்லியிடம் பொருளாதார தலை மை ஆலோசகராக இருந்தவர். ஆகவே நாம் சொன்னால், அந்தக் கருத்தை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.
அவர்கள் ஆட்சியில் ஆலோசக ராக இருந்த அரவிந்த சுப்பிரமணியனே என்ன சொல்லி இருக்கிறார் என்று சொன்னால், மக்களுக்கு உண்மை சரியாகப் புரிந்துவிடும்.
அவரே இந்தப் புள்ளிவிவரங்கள் முறையாக இல்லை என்கிறார். ஒன்றிய அரசு என்ன சொல்கிறது. இந்தியாவில் விலைவாசியே ஏறவில்லை என்கிறது. ஆனால், அது சந்தை விலைமதிப்புடன் ஒப்பிடுகையில் உண்மை இல்லை என்று தெரிகிறது.
இவர்கள் Deflator மதிப்பை வேண்டும் என்றே குறைத்துக் காட்டி விலைவாசி உயரவில்லை என்று பொய் சொல்கிறார்கள். இதுவரை நான் அளித்த விளக்கத்தின் சுருக்கம் இதான்.
அசோக் மோதி என்று ஒரு பிரபலமான பொருளாதார நிபுணர் இருக்கிறார். அவர் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் நம்பகத்தன்மையானவை இல்லை என்று சொல்லி இருக்கிறார். இந்த ஆதாரங்களே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு வேர்ல்டு கப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த அன்று, அந்த சோகத்தை மறைப்பதற்காக ஒன்றிய அரசுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் ஒரு ட்வீட் போட்டார்கள். இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாகச் சொல்லி அந்தத் தகவலில் சொல்லி இருந்தார்கள். டாலரின் மதிப்பு 53 ரூபாய் என வைத்துக் கணக்கிட்டு அதைக் கூறி இருந்தார்கள்.
ஆனால், இன்றைய சந்தையில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 ரூபாய். அதாவது ஒரு டாலருக்கு 30 ரூபாயை விழுங்கிவிட்டு, அந்தப் பொய்க் கணக்கைப் போட்டு மக்களை ஏமாற்ற முயன்றிருந்தார்கள்.
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்திலிருந்த பொருளாதாரத்தை இன்றைய பாஜக அரசு கணக்கிட்டுச் சொல்லும் அளவீட்டின்படி வைத்து கணக்கிட்டிருந்தால் வளர்ச்சியானது 10% மேல் இருந்துள்ளது என்று சொல்ல முடியும். ஆனால், அவர்கள் நேர்மையாக மதிப்பிட்டுச் சொன்னதிலேயே நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8% ஆக இருந்தது.
அன்றைக்கு ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தது. சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள்கூட ஐடி கம்பெனியில் அன்றைக்கு வேலைக்குச் சேர்ந்தார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகள் என்பது ஐடி துறையில்தான் இருந்துள்ளது. இன்றைய நிலவரம் என்ன? 4 மிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளார்கள். இதன்மூலம் வேலை வாய்ப்பு என்பது தடுமாற்றத்தில் உள்ளது.
அதற்கு முன்னால் இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு என்பது நிலைத்தன்மையோடு இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் ராணுவ வேலை என்பது நிரந்தர வேலைவாய்ப்பாக இல்லாமல் 4 வருடங்கள் பணியாக அதை மாற்றி விட்டார்கள்.
ஒன்றிய அரசிடம் பணம் இல்லை. ஆகவே அரசு வேலைகளில் உள்ள காலி இடங்களை நிரப்பவே இல்லை. ஸ்டார்ட் அப் கம்பெனிகள் பெரிய அளவில் உள்ளதாக மோடி பேசிவந்தார். சில நிறுவனங்களின் விளம்பரங்களில் மோடியே தோன்றி பெருமை பேசினார்.
ஆனால், அதில் இந்தியாவின் பங்களிப்பு ஒன்றும் இல்லை. இதுவரை அமெரிக்க நிதியை வைத்து அவர்கள் சமாளித்து வந்தார்கள். அது முடியாததால் பேடிஎம், பைஜூ, ஸ்விக்கி, ஸோமாடோ ஆகிய நிறுவனங்களே ஆட்குறைப்பு செய்து வருகிறார்கள்.
இப்படி இந்தியப் பொருளாதாரம் என்பது மாய உலகத்தில் உள்ளது. நிஜமான பொருளாதார முன்னேற்றம் அடையவில்லை.
இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் 4வது இடத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். பாஜக அரசு ஜிடிபி அளவைக் கொண்டு தனிநபர் வருமானத்தைக் கணக்கிட்டால், நம் நாடு 139வது இடத்தில் இருக்கிறோம். பங்களாதேஷைவிட பின்னால் இருக்கிறோம்.
தனிநபர் வருமானத்தில் இந்தநாடு இந்தியாவைவிடச் சிறப்பாக உள்ளது.
அந்த நாடு டெக்ஸ்டைல் இண்ட்ரஸ்ரியில் மிக வலிமையான கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது. Production linked incentive scheme என்பது மிகமிக முக்கியம். அதாவது பெரிய பெரிய கம்பெனிகள் தயாரிப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் குறைந்தது 1500 கோடியை முதலீடு செய்யவேண்டும்.
சீனாவில் வேலை ஆட்கள் குறைந்துவருகிறார்கள். அமெரிக்காவிலும் இதே நிலை. மேலும் சீனாவில் பல புதிய கொள்கைகளை வகுத்துவிட்டது அந்த அரசு. ஆகவே, இந்த நாடுகளில் சில சிக்கல்கள் உள்ளன.
இந்த ஜியோ பாலிடிக்ஸ் பிரச்சனையை இந்தியா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டி இந்த பி.எல்.ஐ திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
அதில்கூட அதிக லாபம் நம் நாட்டுக்குக் கிடைக்கப்போவதில்லை. உதாரணமாக ஆபிள் நிறுவனம் கலிபோர்னியாவில் போனை டிசைன் செய்கிறது. அதன் உதிரிப்பாகங்களை 9 நாடுகளில் தயாரிப்பதற்காக ஒப்பந்தப் போடுகிறது. இறுதியாக அதை இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்கிறார்கள். ஆகவே அதிக லாபம் தரும் நிறுவனமாக நாம் இதில் இருக்கவில்லை” என்கிறார்.