அயோத்தி ஶ்ரீராமர் கோயில்: கோடிக்கணக்கானவர்களின் கனவும், பிரதிஷ்டை தொடர்பான சர்ச்சைகளும்!
அயோத்தி என்றால் `வெல்ல முடியாத நகரம்’ என்று பொருள். மகாவிஷ்ணு அசுரர்களை அழிப்பதற்காக, சூரிய குலத்தில் தசரதனுக்கு மகனாக அவதரித்தார் என்கிறது இதிகாசம். அப்படிப்பட்ட ராமர் அவதரித்த தலத்தில் ஶ்ரீராமருக்கு அற்புதமாகக் கோயில் ஒன்று எழுப்பபட வேண்டும் என்பது கோடிக்கணக்கான இந்துக்களின் பல நூற்றாண்டுக் கனவு. அந்தக் கனவு தற்போது நனவாகியிருக்கிறது.நீண்டகாலமாக நடைபெற்ற ராம ஜன்ம பூமி வழக்கில் 2019-ம் ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அங்கே ராமர் கோயில் கட்டும்பணி தொடங்கியது. ஶ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திரம் அறக்கட்டளை சார்பில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 1,800 கோடி ரூபாய் செலவில் இந்தக் கோயிலைக் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் மேற்பார்வையில் கோயில் கட்டி முடிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை காண இருக்கிறது. கோயில் மட்டுமல்லாது அங்கே நூலகம், ஆராய்ச்சி மையம், ராமாயணம் தொடர்புடைய பிற இடங்கள் மற்றும் பழங்காலக் கோயில்கள் புனரமைப்பு என்று பல்வேறு திட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட்டுப் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.
ஸ்ரீராம் லல்லா
இந்த நிகழ்வை வரலாற்றுத் தருணமாக உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் கருதுகிறார்கள். எனவே ஶ்ரீராமர் பிரதிஷ்டை செய்யப்படும் நாளைத் திருவிழாவாகவே கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார்கள். இதேவேளையில் பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன.
அயோத்தி ராமர் கோயில் பணிகள் முடிவடையாத நிலையில் பிரதிஷ்டை செய்யலாமா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. மேலும் அங்கே கடந்த 28 ஆண்டுகளாக வழிபடப்படும் மூலவர் விக்ரகம் மாற்றப்படுவது ஏன் என்கிற கேள்வியையும் சிலர் முன்வைக்கிறார்கள். பிரதமர் மோடி ஶ்ரீராம் லல்லா விக்ரகத்தைச் சுமந்துவந்து பிரதிஷ்டை செய்ய இருக்கிறார். `ஆகம விதிப்படி இது சரியா’ என்று சில துறவிகள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தக் கேள்விகள் குறித்து, சாஸ்திர விற்பன்னர்களிடம் கேட்டோம்.
“அயோத்தி மூன்று யுகங்களாக நிலைத்திருக்கும் திருத்தலம் என்பது நம் நம்பிக்கை. ஶ்ரீராமர் அவதாரம் செய்த தலம். அப்படிப்பட்ட தலத்தில் ஶ்ரீராமருக்குக் கோயில் எழுப்புவது மிகவும் அவசியம். அந்தப் பணியில் பல்வேறு தடைகள், வழக்குகள் இருந்தன. அவை தற்போது நீங்கிக் கோயில் முழுமை பெறும் தருவாயை நெருங்கியிருகின்றன.
இந்த நிலையில் ஜனவரி 22-ம் தேதி பிராணப் பிரதிஷ்டையோடு ஶ்ரீராமர் கோயில் திறப்புவிழா காண இருக்கிறது. இந்த நிகழ்வை பிரதமர் மோடி முன்னின்று நடத்த இருக்கிறார். இன்னும் சில பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும்போது கோயிலைத் திறப்பது ஆகம விதிப்படி சரியா… என்று சிலர் கேட்கிறார்கள்.
முதலில் அங்கே ஆகமப் பிரதிஷ்டையே நடைபெறவில்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாகத் தமிழகம் மற்றும் தென் இந்தியப் பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ரம், வைகானசம் என்னும் ஆகமங்கள் பின்பற்றப்படும். ஆனால் அயோத்தியில் ஆகமங்கள் பின்பற்றப்படுவதில்லை. அங்கே வைதீகப் பிரதிஷ்டை மட்டுமே பின்பற்றப்படுகின்றன. வைதீகப்படி கருவறை தயாரான நிலையில் அங்கே சுவாமியை எழுந்தருளப் பண்ணலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை.