ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்… மகனை கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற விமானப்படை ஊழியர்… !
ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவர் சைதன்யா . இவருக்கு வயது 33. இவர் சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் பார்வதி நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நள்ளிரவில் சைதன்யா தனது மூத்த மகன் 8 வயது பத்ரியின் கழுத்தை நெரித்து, தூக்கில் தொங்கவிட்டும் கொலை செய்துள்ளார். வீட்டில் மற்றொரு அறையில் இளைய மகன் கவுசிக்குடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி வைதேகிக்கு இவை எதுவும் தெரியவில்லை. மெரினாவுக்கு சென்ற சைதன்யா,அங்கிருந்து செல்போனில் தனது நண்பரிடம் “என் மகனை கொன்றுவிட்டேன். நானும் சாகப்போகிறேன். என் மனைவிக்கு உதவி செய்யுங்கள்” எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர், உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் மெரினா கடற்கரையில் உள்ள ரோந்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த போலீசார் கடற்கரையில் பதற்றத்துடன் நின்ற சைதன்யாவை தடுத்து பத்திரமாக மீட்டு விசாரித்தனர். விசாரணையில் அவர்,மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய வந்ததாக கூறியுள்ளார்.
சைதன்யாவின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி வைதேகியிடம் விசாரணை நடத்த சென்ற போது அவரது மனைவிக்கு தெரியவந்தது. அடுத்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கிய மகனின் உடலை பார்த்து வைதேகி கதறி துடித்தார். இதனையடுத்து பத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆன்லைன் சூதாட்டத்தில் சைதன்யா அதிக அளவில் பணத்தை இழந்ததாகவும், இதனால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். தனது சொத்துக்கள் முழுவதையும் விற்றும், கடனை அடைக்க முடியவில்லை.
கடன் தொல்லை காரணமாக விடுப்பு எடுத்துவிட்டு சைதன்யா சொந்த ஊருக்கு சென்றார். டிசம்பர் 20ம் தேதி மீண்டும் சேலையூர் வந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்தனர். கடனை அடைக்க முடியாமல் திணறிய சைதன்யா, தான்உயிரை இழந்து விட்டால் அந்த வேலை மனைவிக்கு கிடைத்துவிடும். இளைய மகனை அந்த பணத்தில் அவர் காப்பாற்றி கொள்வார் என திட்டமிட்டுள்ளார்.
இதனால் மூத்த மகனை கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். சைதன்யா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் “என் மூத்த மகன் பத்ரி என் மீது அதிக பாசம் கொண்டவன். என்னைவிட்டு இருக்கவே மாட்டான். அதனால் என்னுடன் அவனை அழைத்து செல்கிறேன். என் மனைவி 2வது திருமணம் செய்து கொண்டு மகன் கவுசிக்கை நல்லபடியாக பார்த்து கொள்ள வேண்டும்” என எழுதி இருந்தார்.