கொஞ்சம் காசு செலவு பண்ணாலே போதும் சன்ரூஃப் கிடைக்கும்!! ஹூண்டாய் கார் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது!
ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரில் விரைவில் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் அம்சங்கள் வழங்கப்பட உள்ளதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், ஐ20 காரின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் மட்டுமே இந்த புதிய வசதிகள் வழங்கப்பட உள்ளனவாம். இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகி உள்ள படங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்று ஐ20 ஆகும். பொதுவாகவே, ஹூண்டாய் கார்களில் நிறைய நவீன தொழிற்நுட்பங்கள் வழங்கப்படும் என்பது நமக்கு தெரியும். அதையும் தாண்டி, ஐ20 கார் ஸ்போர்டியான டிசைனில் வடிவமைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, ஐ20 கார்களை இந்தியர்கள் நிறைய பேர் வாங்குகின்றனர்.
ஐ20 ஹேட்ச்பேக் காரை கடந்த 2023ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்து இருந்தது. புதிய ஹெட்லைட்கள், பம்பர்கள் உடன் காரின் முன்பகுதி ஆனது முற்றிலுமாக மாற்றப்பட்டது. மேலும், சக்கரங்களின் டிசைனும் திருத்தப்பட்டன. இந்த நிலையில், புதிய 2024ஆம் வருடத்தை முன்னிட்டு, ஐ20 காரின் புதிய மிட்-ஸ்பெக் வேரியண்ட்டில் கூடுதல் வசதிகளை சேர்க்கும் முனைப்பில் ஹூண்டாய் நிறுவனம் உள்ளது.
இந்த வகையில், ஐ20 காரில் புதிய மிட்-ஸ்பெக் வேரியண்ட்டாக ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், இந்த புதிய வேரியண்ட் சில கூடுதல் வசதிகளை பெறவுள்ளது. ஐ20 காரில் புதிய ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் மிக முக்கியமான அம்சமாக சன்ரூஃப் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் காரை வாங்குபவர்களில் சுமார் 95 சதவீதத்தினர் காரில் சன்ரூஃப்-ஐ எதிர்பார்ப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ஹூண்டாய் நிறுவனமும் நிச்சயமாக அறிந்திருக்கும். அதனையடுத்தே, ஐ20 ஸ்போர்ட்ஸ் (ஆ) காரில் ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ வழங்க முடிவெடுத்துள்ளது. அத்துடன், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் சாஃப்ட்-டச் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளன.
இதில் சாஃப்ட்-டச் ஆர்ம்ரெஸ்ட் ஆனது முன் இருக்கை பயணிகளுக்கு மட்டுமே முன் கதவுகளில் கொடுக்கப்பட உள்ளது. அதாவது, வழக்கமான ஆர்ம்ரெஸ்ட்டை விட இவை லெதரேட் மெட்ரீயல்கள் மூலமாக சற்று கூடுதல் மென்மையானவைகளாக இருக்கும். இந்த விபரங்கள் யாவும், ரஷ்லேன் செய்தித்தளத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ள படங்களின் வாயிலாக தெரியவந்துள்ளன.
மேற்கூறப்பட்ட வசதிகள் ஹூண்டாய் ஐ20 காரின் டாப் அஸ்டா (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் ஏற்கனவே வழங்கப்படுகின்றன. ஐ20 அஸ்டா (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் இவை மட்டுமின்றி, காற்றின் தரத்தை சுட்டிக்காட்டும் வசதி உடன் ஆக்ஸிபூஸ்ட் காற்று சுத்திகரிப்பான், வயர்லெஸ் சார்ஜருக்கு கூலிங் பேட், 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் நேவிகேஷன் சிஸ்டம், போஸ் பிரீமியம் 7-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் பெறுகிறது.
ஓவர்-தி-ஏர் மேப் உடன் ஹூண்டாயின் ப்ளூலிங் கனெக்ஷனையும் ஐ20 காரின் விலையுயர்ந்த அஸ்டா (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் பெறலாம். ஆனால், இவற்றை ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் பெற முடியாது. ஆனால், புதிய ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டை விரைவில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வாங்கலாம்.