ரஞ்சி கோப்பை: பவுலிங்கில் மிரட்டிய குஜராத்… தமிழக அணி அதிர்ச்சி தோல்வி

Ranji-trophy | Tamilnadu-cricket-team: 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில், எலைட் பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், எலைட் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு- குஜராத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் வல்சத்தில் கடந்த 5ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முறையே குஜராத் 236 ரன்களும், தமிழ்நாடு 250 ரன்களும் எடுத்தன. 14 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்களுடன் தடுமாறியது.

3-வது நாளான நேற்று சரிவில் இருந்து மீண்ட குஜராத் 312 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. மனன் ஹிங்ரஜியா (52 ரன்), உமங் குமார் (89 ரன்), ரிபல் பட்டேல் (81 ரன்) அரைசதம் அடித்தனர். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதன் மூலம் குஜராத் அணி 299 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 32 ரன் எடுத்தது. சாய் சுதர்சன் (18 ரன்), கேப்டன் சாய் கிஷோர் (4 ரன்) களத்தில் இருந்தனர்.

தமிழக அணியின் வெற்றிக்கு இன்னும் 267 ரன்கள் தேவை உள்ள நிலையில், கடைசி நாளான இன்று தமிழக அணி தொடர்ந்து விளையாட களமாடியது. களத்தில் இருந்த சாய் சுதர்சன் 18 ரன்னுக்கு அவுட் ஆனார். இதன்பிறகு, கேப்டன் சாய் கிஷோருடன் ஜோடி அமைத்த பாபா இந்திரஜித் 39 ரன்னில் அவுட் ஆனார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் கிஷோர் 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்களில் அதிகபட்சமாக பிரதோஷ் பால் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடி அமைத்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். இதனால், தமிழக அணியின் 2ம் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இறுதியில், 81.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழக அணி 187 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 111 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தமிழகத்தை வீழ்த்தியது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *