அம்பானிக்கு எதிராகப் போட்ட திட்டம் தோல்வி.. ZEE-SONY கூட்டணி முறிவு..?!
இந்தியாவில் மிகப்பெரிய மீடியா நிறுவனமாக உருவெடுக்கவும், மீடியா துறையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் ஆதிக்கத்தை உடைக்கவும் பல தடைகளைத் தாண்டி ஜீ மற்றும் சோனி நிறுவனங்கள் இணைப்புக்குத் தயாராகியிருக்கும் வேளையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இந்திய மீடியா துறையில் தற்போது பெரும் போட்டி நடைபெற்று வருகிறது, முகேஷ் அம்பானி தனது வயாகாம்18 உடன் டிஸ்னி-ஐ இணைக்கும் பணியில் தீவிரமாக உள்ளார், கௌதம் அதானி மீடியா துறையில் தொடர்ந்து முதலீடு செய்ய வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி இந்தியா பிரிவு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைப்புத் தோல்வியில் முடியலாம் என்றும், சோனி இந்தியா ஜனவரி 20 க்கு முன் இணைப்பு ஒப்பந்தத்தை நிராகரிக்கும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.ZEE-SONY இணைப்பில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் சோனி தரப்பில் இந்த 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இணைப்புத் திட்டத்தைத் திரும்பப் பெறத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனத்தை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிய உள்ளது.ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகள் படி ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மீதான ஒழுங்குமுறை ஆய்வுக்கு மத்தியில் இணைக்கப்பட்ட நிறுவனத்தைக் கோயங்கா வழிநடத்துவதில் சோனி நிர்வாகம் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது.2021ல் ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி இந்தியா மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் படி அனைத்து ஒழுங்குமுறை ஆணையங்களின் ஒப்புதல்களைப் பெற்றுள்ள வேளையிலும், இணைப்பில் பல பிரச்சனைகள் உள்ளது.
இதனால் குறித்த நாளுக்குள் இணைப்பு நடக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.டிசம்பர் மாதம் இணைப்புப் பணிகளுக்குக் கடைசி நாளான டிசம்பர் 21-க்கு பின்பு கூடுதல் அவகாசம் வேண்டும் என ஜீ என்டர்டெயின்மென்ட் தரப்பில் இருந்து சோனி இந்தியாவின் தாய் நிறுவனமான க்ளூவர் மேக் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.ஒழுங்குமுறை ஆய்வு, அது தொடப்பான பிரச்சனைக்குப் பின்பு ZEE-SONY இணைக்கப்பட்ட நிறுவனத்திற்குத் தங்கள் தரப்பில் உள்ள பிரதிநிதியைத் தான் நியமிக்க வேண்டும் என இரு தரப்பும் மல்லுக்கட்டி வருகிறது.
இதன் அடிப்படையில் சோனி என்பி சிங்-ஐயும், ஜீ என்டர்டெயின்மென்ட் தரப்பில் புனித் கோங்கா முன்வைக்கப்படுகிறது.ZEE-SONY இணைக்கப்பட்ட நிறுவனத்தில் 70 டிவி சேனல், ZEE5 மற்றும் Sony LIV ஆகிய இரு ஸ்ட்ரீமிங் தளங்கள், Zee Studios மற்றும் Sony Pictures என இரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனம் உருவாகும் முயற்சி தோல்வி அடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.