ரசிகர்கள் அதிர்ச்சி..! நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்தின் மீது வழக்கு : சிவசேனா நிர்வாகி புகார்..!
நயன்தாரா, ஜெய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் ‘அன்னபூரணி’ இது நயன்தாராவுக்கு 75ஆவது படமாகவும் அமைந்தது.
இந்தப் படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இருப்பினும் இத்திரைப்படம் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை திரையரங்குகளில் பெறவில்லை. வசூலும் சுமாராகவே இருந்தது.
தொடர்ந்து அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிகிஸில் இந்த படத்தை பார்க்கலாம். சமையல் குறித்து உருவான இந்த திரைப்படமானது ஓடிடி வெளியீட்டுக்கு பின் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், இந்தப்படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் கூறி, மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், ‘இந்துப் பெண்ணான நயன்தாரா புர்கா அணிந்து, நமாஸ் செய்த பின் இறைச்சி சமைக்கும் காட்சியையும், ராமர் குறித்து நடிகர் ஜெய் பேசியிருக்கும் வசனத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, இதுவொரு இந்து விரோதப் படம் என குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் லவ் ஜிகாத்தை இப்படம் விளம்பரம் செய்வதாகவும் புகார் கூறியுள்ளார்.