ரொம்ப ரொம்ப கம்மியான விலையில் குடும்பமே போற மாதிரி காரை இந்தியாவிற்காக தயார் செய்யும் மாருதி!
எஸ்யூவி கார்களை போலவே இந்தியாவில் எம்பிவி ரக கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் அதிக பேரால் பயணிக்க முடியும். முக்கியமாக, தாராளமான இட வசதிக் கொண்டதாக இருக்கும் என்கிற காரணத்தினால் எம்பிவி ரக கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றன.
இதற்கு மிக சிறந்த உதாரணமாக மாருதி சுஸுகியின் எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் டொயோட்டா இன்னோவா ஆகியவை கார் மாடல்கள் இருக்கின்றன. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார் மாடல்கள் இவையே ஆகும். குறிப்பாக, மாருதி சுஸுகியே இந்த பிரிவில் தலைவனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 இரண்டிற்கும் நல்ல விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவில் மாருதி சுஸுகி மற்றுமொரு எம்பிவி ரக காரை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வாகனம் தற்போது விற்பனையில் இருக்கும் எர்டிகாவை விட பலமடங்கு குறைவான விலைக் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
விலை குறைவாக விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் சற்று காம்பேக்டான தோற்றத்தில் இருக்கும். அதாவது, எர்டிகாவைவிட சற்று சிறிய தோற்றத்தில் இருக்குமாம். இதுவே அது விலை குறைவாக விற்பனைக்கு வரும் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. இதுமட்டுமில்லைங்க, இதன் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப நிலை வேரியண்டில் சிறப்பம்சங்கள் சற்று குறைவாகவே மாருதி சுஸுகி வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இந்த கார் குறித்த எந்தவொரு முக்கிய விபரங்களையும் மாருதி சுஸுகி தற்போது வெளியுலகில் பகிர்ந்துக் கொள்ளவில்லை. மாருதி சுஸுகி இந்த காம்பேக்ட் எம்பிவியை ஒய்டிபி எனும் குறிப்பிடுகின்றது. இது வெறும் குறிப்பெயர் மட்டுமே ஆகும். விற்பனைக்கு வரும்போது வேறு பெயர் சூட்டப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மாருதி சுஸுகி நிறுவனம் இந்த ஆண்டில் ஏகப்பட்ட புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்களை விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. அந்தவகையில், 2024-க்காக புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகியவை ஏற்கனவே தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இந்த ஆண்டில் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையிலேயே புதிய எம்பிவி ஒய்டிபி கார் பற்றிய விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. ஜப்பானில் சுஸுகி ஸ்பேசியா எனும் காம்பேக்ட் எம்பிவி ரக காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலையே லேசாக பட்டி-டிங்கரிங் செய்து இந்தியாவில் புதுமுக மாடலாக மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் மற்றும் நடுத்தர மக்களுக்கான ஓர் எம்பிவி ரக கார் மாடலே ஸ்பேசியா ஆகும். வேகன்-ஆர் கார் மாடலுக்கு சற்று பெரிய தோற்றம் கொடுத்ததைப் போல் இருக்கும் இந்த கார் மாடலுக்கு ஜப்பானியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் மாருதி சுஸுகி இந்தியாவிலும் ஸ்பேசியாவை களமிறக்க இருக்கின்றது. இதன் நீளம் 3,395 மிமீட்டர் ஆகும். எர்டிகாவைவிட கொஞ்சம் குறைவான அளவே இதுவாகும். இந்த கார் மலிவு விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என கூறப்பட்டாலும், அதில் பிரீமியம் அம்சங்கள் நிறைந்திருக்கும் என கூறப்படுகின்றது.
குறிப்பாக, இதன் உயர்நிலை தேர்வில் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தியாவில் தற்போது மலிவு விலை எம்பிவி ரக கார் மாடலாக ரெனால்ட் ட்ரைபர் காட்சியளிக்கின்றது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 6.33 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த மலிவு விலை எம்பிவிக்கே பெரும் போட்டியாளனாக ஒய்டிபி (ஸ்பேசியா)-இன் வருகை அமையப் போகின்றது. இதன் வருகை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெகு விரைவில் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து விரைவில் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பு நம் அனைவரின் மத்தியிலும் எழும்பி இருக்கின்றது.