‘ஹீரோ’ ஹீரோ ஆன கதை..!சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரித்த நிறுவனம் இப்போ ரூ.79,755 கோடி சாம்ராஜ்ஜியம்..!!
நாட்டில் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களாக விளங்கும் பல சிறிய அளவில் தொடங்கப்பட்டவையாகும். இதில் பல நிறுவனங்கள் நாடு விடுதலை அடைவதற்கு முன்பே தொடங்கப்பட்டவை.
அப்படி பஞ்சாபின் அமிர்தசரஸை சேர்ந்த பிரிஜ்மோகன் லால் முஞ்சால் தனது மூன்று சகோதரர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியை 1944 ஆம் ஆண்டில் தொடங்கினார்.பின்னர் தங்களது கம்பெனியை அவர்கள் லூதியானாவுக்கு மாற்றினர். 1954 ஆம் ஆண்டில் சைக்கிளுக்குத் தேவையான அடிப்படையான சாமான்களைத் தயாரிக்கும் ஹீரோ சைக்கிள் லிமிடெட் என்ற கம்பெனியை அங்கு நிறுவினர். முதலில் ஃபோர்க்குகள் பின்னர் ஹேண்டில் பார் மற்றும் இதர சாமான்களை தயாரித்தனர். முஞ்சால் சகோதரர்களான பிரிஜ்மோகன் லால் முஞ்சால், தயானந்த், சத்யானந்த், ஓம் பிரகாஷ் ஆகியோர் பின்னர் சைக்கிள்களை தயாரிக்கத் தொடங்கினர். அதன் பின்னர் மொபெட்களை தயாரித்தனர். ஹீரோ மெஜஸ்டிக் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த மொபெட்களை பார்த்ததும் அதன் தோற்றம் எல்லோருக்கும் பிடித்ததாக இருந்தது.அப்போது இந்தியாவில் மொபெட் சந்தையில் இருந்த லூனா, டிவிஎஸ் மொபெட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக ஹீரோ மெஜஸ்டிக் உருவானது. பின்னர் மார்க்கெட்டில் இந்த மொபெட்களை விற்பனையில் முந்தியது. இதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டில் ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மோட்டார் பைக்குகளைத் தயாரித்தனர்.2010 ஆம் ஆண்டில் முஞ்சால் குடும்பம் நான்காகப் பிரிந்தது. பிரிஜ்மோகன் குடும்பம் ஹோண்டா ஜேவியை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. 2011இல் ஹோண்டாவுடன் இருந்து முஞ்சால் பிரிந்து விட்டது. 2015 ஆம் ஆண்டில் தனது 92 ஆவது வயதில் பிரிஞ்மோகன் காலமானார். தான் உயிருடன் இருக்கும் வரை தனது மகன்களை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.மூத்த மகன் பவன் முஞ்சால் ஹீரோ மோட்டார் கார்ப்பின் செயல் தலைவராகவும் முழுநேர இயக்குநராகவும் உள்ளார். ஹீரோ மோட்டார் கார்ப்பின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.79,755 கோடி ஆகும்.ஒரு சிறிய நிறுவனத்தைத் தொடங்கி தனது அயராத உழைப்பால் நாட்டின் மிகப் பெரிய கார்ப்பொரேட் குரூப்பாகவும் உலகின் நம்பர் 1 மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனமாகவும் ஹீரோ மோட்டார் கார்ப்பை பிரிஜ்மோகன் உருவாக்கி சென்றார்.தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் அவரது சாதனையைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருதை 2005 ஆம் ஆண்டில் வழங்கியது.