கடனில் லாரி வாங்கியவர்.. இப்போது கோடிகளை அள்ளுகிறார்.. யார் இந்த விஜய்..?!
ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சிறிது கடன் வாங்கி அதில் ஒரு லாரியை வாங்கினார் விஜய் சங்கேஷ்வர்.
ஒரேயொரு லாரியை வைத்து எப்படி தொழிலை பெரிதாக நடத்த முடியும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். ஆனால் அதை சங்கேஷ்வர் நிரூபித்துக் காட்டினார். சிங்கிள் லாரியை வைத்து பிசினஸைத் தொடங்கியவரிடம் இப்போது 5700 வாகனங்கள் உள்ளன. இந்தியாவின் டிரக்கிங் கிங் எனச் செல்லமாக அழைக்கப்படும் விஜய் சங்கேஷ்வர் 1976 ஆம் ஆண்டில் தனது ஒற்றை லாரியுடன் தொழிலைத் தொடங்கினார். விஜய்-யின் குடும்பம் சொந்தமாக ஒரு பப்ளிஷிங் கம்பெனியை நடத்தி வந்தது. ஆனால் விஜய்க்கோ எப்போதும் டிரான்ஸ்போர்ட் பிசினஸில் தான் நாட்டம் இருந்து வந்தது. ஆனால் அவரது விருப்பத்தை விஜய்யின் குடும்பத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கென்று சொந்தத் தொழிலை செய்ய வேண்டும் என்ற அவரது முடிவை யாரும் வரவேற்கவில்லை.இருப்பினும் அவரது குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி விஜய் சங்கேஷ்வர் தனக்கென்று ஒரு தொழிலைத் தொடங்கினார். யாருக்காகவும் தனது கனவை விட்டுக் கொடுக்கவில்லை. எவ்வளவோ எதிர்ப்பு வந்தபோதும் அதை கண்டுகொள்ளவில்லை.விஜய் தனது டிரான்ஸ்போர்ட் பிசினஸை விஜயானந்த் டிராவல்ஸ் என்ற பெயரில் தொடங்கினார். பின்னர் அது விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவர் தொடங்கிய நிறுவனம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நாட்டின் முன்னணி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களான டிவிஎஸ், ஏபிடி ஆகியவற்றுடன் சரியாகப் போட்டி போட்டு முன்னிலைக்கு வந்தது விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ். சரக்குப் போக்குவரத்தில் முன்னணி டிரான்ஸ்போர்ட் நிறுவனமாக விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் உருவெடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகள், மினி லாரிகள், மினி டிரக்குகள் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கின்றன.இன்றைக்கு இந்தியாவில் விஜய் சங்கேஷ்வரும் குறிப்பிடத்தக்க பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சங்கேஷ்வரின் கம்பெனி 115 சதவீத லாபத்தை பங்குச் சந்தைக்கு அளித்தது. விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.6142 கோடி ஆகும். விஜய் சங்கேஷ்வரின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தின் தார்வாட் ஆகும். இளங்கலை காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவர் தொடங்கிய செய்தித்தாளை பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியா வாங்கிக் கொண்டது. தொழில் துறையில் அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் விஜய் சங்கேஷ்வருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.