ராமர் படத்துடன் கூடிய சிறப்பு சேலை: சூரத் நகரில் இருந்து அயோத்தி செல்கிறது
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நெசவுத் தொழில் துறையை சேர்ந்த லலித் சர்மா கூறியதாவது: அயோத்தி கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் உலகம் முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது.
இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வகையில் சிறப்பு சேலையை நாங்கள் தயாரித்துள்ளோம்.
அயோத்தி கோயில் மற்றும் கடவுள் ராமரின் படம் இதில் இடம்பெற்றுள்ளது. அயோத்தி கோயிலில் உள்ள ஜானகி தேவிக்கு இதனை நாங்கள் வழங்க உள்ளோம். இந்த சேலை விரைவில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். கும்பாபிஷேக நாளில் அயோத்திக்கு செல்ல முடியாத பக்தர்கள், தங்கள் சொந்த வழியில் அந்த நிகழ்ச்சியுடன் இணைத்துக் கொள்ள விரும்பியதால் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது.
இவ்வாறு லலித் சர்மா கூறினார். ராகேஷ் ஜெயின் என்ற நெசவுத் தொழிலதிபர், லலித் சர்மாவுடன் கலந்தாலோசித்து இந்த சேலையை தயாரித்துள்ளார். கும்பாபிஷேக நாளான ஜனவரி 22-ம் தேதிக்கு முன்னாக இந்த சேலை அயோத்தியை சென்றடையும் என கூறப்படுகிறது.