இன்று முதல் 12ம் தேதி வரைபக்தர்களுக்கு தடை… சதுரகிரி மலையேற அனுமதி மறுப்பு!
இன்று ஜனவரி 9ம் தேதி பிரதோஷம், நாளை மறுதினம் தை அமாவாசையையொட்டி பக்தர்களுக்கு சதுரகிரி மலையேற வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி மலையில், பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், மாத சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி என 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று டிசம்பர் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.